ஆசிரியர்களின் மதிப்பை உணர்வோம்

 *ஆசிரியர்களின் மதிப்பை உணர்வோம்*


நான் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர்.

நான் அரசுப்பள்ளியில் தான் கல்வி  கற்றேன்.

என் மகனையும் எங்கள் ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் தான் சேர்த்துள்ளேன்.

தற்போதைய ஊரடங்கு காலத்தில் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற  தமிழ்நாடு அரசு மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நேரத்தில் பலரது வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு, தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி வருவதை பலரும் வரவேற்று வருகின்றனர்.


இந்த நிலையில் அரசுப்பள்ளி  ஆசிரியர்களிடம் இந்த அரசின் மீது அதிருப்தி ஏற்படும் வகையில்,   சில நாட்களாக 

ஆசிரியர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்யவேண்டும்   என்ற கருத்தை  சிலர் சமூக வலைதளங்களில்   பரப்பி வருகின்றனர்.


அவர்களிடம் விவாதம் செய்வதற்காகவோ, 

அல்லது

ஆசிரியர்களின்  சம்பளம் பறிபோய்விடுமே என்ற பதற்றத்திலோ, 

அல்லது

ஆசிரியர்கள் மீது பரிதாபத்தை உருவாக்குவதற்காகவோ   இந்தப் பதிவை  நான் எழுதவில்லை.


ஆசிரியர் என்ற ஒரு அடையாளத்தின் மீது பொது சமூகத்தின் பார்வை என்னவாக இருக்கிறது? என்ற எண்ணவோட்டம்  தான் என்னை இதை எழுதத்தூண்டியது.


  எனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை தற்போது நினைத்துப் பார்க்கிறேன்.

நான் பள்ளிக்கூடம் சென்று படிக்காமல் போயிருந்தால் , இன்று நான்    என்னவாக இருந்திருப்பேன்?  என்று நினைத்துப் பார்க்கிறேன்.


அன்று 

ஆசிரியர்களை 


*எங்களுக்கு  கல்வி கற்றுத்தரும் ஒரு தொழிலாளிகளாக நாங்கள் பார்க்கவில்லை.


*சம்பளத்துக்கு வேலை செய்யும் கூலிக்காரர்களாக நாங்கள் பார்க்கவில்லை.


*நம்மை வைத்து சம்பாதிக்கும் தொழில் அதிபர்களாக நாங்கள் பார்க்கவில்லை.


மாறாக 


★எங்களது முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு  *நலம்விரும்பியாக*  ஆசிரியர்களை  நாங்கள் பார்த்தோம்.


★எங்களை கரையேற்றிவிடும் *கலங்கரை விளக்கமாக* ஆசிரியர்களை நாங்கள் பார்த்தோம்.


★எங்களுக்கான *உரிமையுடையவர்களாக* ஆசிரியர்களை  நாங்கள் பார்த்தோம்.


★ தாய், தந்தை , நண்பர்கள் , உறவினர்கள் போன்று தவிர்க்க முடியாத ஒரு *உறவு முறையாக* ஆசிரியர்களை   நாங்கள் பார்த்தோம்.


★நமக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும் *கடவுள்களாக* நாங்கள் பார்த்தோம்.



ஆசிரியர்களைப் பற்றி  குறை கூறுவது என்பதை பற்றி நாங்கள் கற்பனையில் கூட நினைத்ததில்லை.


அன்றைக்கு 

ஆசிரியர்கள் என்றால்  பொதுச்  சமூகத்திலும் மிகப்பெரிய மரியாதை இருந்தது.


ஆனால் இன்று 

ஆசிரியர் என்ற அடையாளம் விமர்சனம்  செய்யப்படும் இடத்தில் இருப்பதற்கு  காரணங்கள் என்னவாக  இருக்கும்?


நான் அறிந்தவரையில்,


காரணம் 1:

இன்றைய காலகட்டத்தில் 

தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை, மாணவர்களின்     மதிப்பெண்களை மட்டும்   உயர்த்துவதற்காக உழைக்கும் உழைப்பாளர்கள் போன்று நடத்துகின்றனர்.




காரணம் 2:

பணம் கொடுத்து கல்வி பயில வரும் மாணவர்கள், ஆசிரியர்களை  தாங்கள் கொடுக்கும் கட்டணத்திற்காக  வேலை செய்யும் வேலையாட்களாக  நினைக்கின்றனர்.

இவ்வாறான மனநிலையுடன் கல்வி பயின்ற இன்றைய தலைமுறையினர் தான் ஆசிரியர் என்ற புனிதமான பணியின் மீது  விமர்சனங்களை வீசுகின்றனர்.



காரணம் 3:

சில அரசியல் கட்சிகள்  ஆசிரியர்களை, தொழிலாளர்களாகக் கருதி தங்கள் சார்பில் இயங்கும் சங்கங்களை , இதர  தொழிற்சங்கங்கள் போன்று நடத்தி வருகின்றனர். 

இதன் மூலம்

ஆசிரியர் என்பவர் சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர் தான்  என்பதாக பொதுப்புத்தியில் வலிந்து  புகுத்த முனைகின்றனர்.




இவை அனைத்தும் தான், 

இன்று வேலை செய்யாத ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்தால் என்ன? என்ற கருத்து வளர அடிப்படைக் காரணங்களாகியுள்ளன.

இந்த கருத்தின் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் பற்றிய பொறாமை கலந்த வன்ம விமர்சனங்களும்  சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ளது என்பதுதான் ஆசிரியர்களின்  துரதிருஷ்டம்.

   

அதேசமயம் 

ஆசிரியர்களை விமர்சிப்பவர்களுக்கு  எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு  சமூக அவலம்.

இதற்காக 

அவர்களை குற்றம் சொல்ல தேவையில்லை .

ஏனென்றால் அவர்களது புறச்சூழல் அவ்வாறுதான் இருந்தது, இருக்கிறது.


யாராவது

நம் மீது அன்பு காட்ட மாட்டார்களா! என்று ஏங்கும் நிலைக்கு இந்த உலகமே தள்ளப்பட்டுள்ள  இன்றைய காலகட்டத்தில் கூட,

எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி மாணவர்களை அன்பு செய்யும் ஒரு உன்னதமான உறவு என்றால், அது   ஆசிரியர் தான்.



இவர்களைப் போன்று  ஒவ்வொரு  ஆசிரியர்களும்,  

தங்களைத்தாங்களே,

"நாம்  சம்பளத்திற்குத் தானே  வேலை செய்கிறோம்"  என்ற மனப்பாண்மையை வளர்த்துக் கொண்டால் , 

குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதை நிறுத்திவிடுவார்களே!


அதன்பிறகு 

மாணவர்களின் 

நிலைமை என்னவாகும்?,  

என்பதை நாம்  நினைத்துப்பார்க்க வேண்டும்.



சம்பளத்திற்கு வேலை செய்யும் கூலிகள் தான் இந்த ஆசிரியர்கள் என்ற கருத்து பொதுச்சமூகத்திடமும், ஆசிரியர்களிடமும்  முழுமையாக பரவி நிலைத்துவிட்டால்,



*எதிர்காலத்தில் திறமையானவர்கள் நாட்டில் நிறைந்திருப்பார்கள்,

ஆனால் அவர்களிடம் அன்பு இருக்காது.


*வல்லவர்கள் பெருகியிருப்பார்கள்,  ஆனால் அவர்கள் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள்.


*செயல்வீரர்கள் அதிகமாக இருப்பார்கள் , ஆனால் அவர்களிடம் பொதுநலம் இருக்காது.


இவ்வாறு எதிர்கால அபாயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் .

ஆனால் இவையெல்லாம் ஏதோ சாபம் விடுவது  போன்று அமைந்துவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.


பிற தொழில்களில் அன்பு என்பது இன்றியமையாத ஒன்று கிடையாது.


ஆனால் ஆசிரியர் பணியில் அன்பு என்பது  இன்றியமையாத ஒன்று.


அத்தகைய தன்னலமில்லா அன்பை பணத்தால் அளவிட முடியுமா?


ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை போற்றுவதும், அதன் பின்  விமர்சிப்பதும் முரண்பாடாக இல்லையா?.


நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஆயிரம் வழிகளை சிந்தித்து அதில் சிறந்த வழிகளை எல்லாம்  செயல்படுத்திப் பார்க்கலாம்.

சம்பளக் குறைப்பு மட்டுமே இதற்கு முழு தீர்வு ஆகாது.


ஆசிரியர்களுக்கு

சம்பளக்குறைப்பு என்ற கோரிக்கை,  எங்களை புண்படுத்தவில்லை.


மாறாக

இந்த சம்பளக் குறைப்பு என்ற  கோரிக்கையின் பின்புலத்தில் உள்ள பொதுச்சமூகத்தின்   பார்வையும், மதிப்பீடுகளும் தான் எங்களை அதிகமாகக் காயப்படுத்தியுள்ளது.




*பள்ளிகள் நீண்டகாலமாக திறக்காததால் எங்கள் மாணவர்களின் கல்வி எந்த அளவிற்கு  பாதிக்கப்பட்டிருக்கிறதோ?*


 *எப்பொழுது மாணவர்களுடன் நேரில் அமர்ந்து கற்பித்தல் பணியில் ஈடுபடப்போகிறோமோ?*


போன்ற  ஆசிரியர்களது ஏக்கமும் , அக்கறையும் விமர்சிப்பவர்களுக்கு புரியப்போவதில்லை.

தாயின் அன்பு எவ்வளவு மதிப்பு வாய்ந்ததோ, 

அத்தகைய மதிப்பு வாய்ந்தது ஆசிரியர்களின் அன்பும், அக்கறையும், அர்ப்பணிப்பும்.


ஆசிரியர் பணியில் இத்தகைய மதிப்புவாய்ந்த அன்பு, அக்கறை , அர்ப்பணிப்பு ஆகியவற்றை நீக்கிவிட்டு,

 கற்பித்தல் என்ற தொழிலை மட்டுமே சார்ந்து மதிப்பிட்டால் , நீங்கள் கூறுவது போன்று ஆசிரியர்கள்   என்பவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்யும் வேலைக்காரர்கள் தான்.


ஆனால் மதிப்பிட முடியாத அன்பு , அக்கறை , அர்ப்பணிப்பை விலக்கிவிட்டு ஆசிரியர் பணியைச் செய்யவே முடியாது என்பதுதான் இந்தப் பணியின்  ஆகச்சிறந்த தனிச்சிறப்பு.



கடந்த சில நாட்களாக சிலரின்  விமர்சனங்கள் ஆசிரியர்களின்  இந்த புனிதமான அன்பை அலட்சியம் செய்வதாக இருக்கிறது.



நான் புதிய நபரிடம் என்னை அறிமுகம் செய்யும் போது

"நான் ஒரு முதல் வகுப்பு ஆசிரியர்" என்று  பெருமிதத்துடன் அடையாளப்படுத்திக்கொள்வேன்.

ஏனென்றால் 

*எழுத்தறிவித்தவன் இறைவன்* அல்லவா.


ஆசிரியர் பணி பற்றிய

தற்போதைய  விமர்சனங்கள் என்னிடம் இருக்கும் இந்த பெருமித உணர்வை சற்றே அசைத்து பார்த்திருக்கின்றது.


இருப்பினும்,

   இவர்களின்  விமர்சனங்களுக்காக எங்களது மனப்பான்மைகளையும், கடமைகளையும் ஒரு போதும் நாங்கள்  கைவிடப்போவதில்லை.

தாய்க்கு நிகரான 

அன்புடன், 

இறைவன் செய்யும்   படைப்புத்தொழிலுக்கு நிகரான ஆசிரியர் எனும் அறப்பணியை

 முழு அர்ப்பணிப்புடன் என்றென்றும் செய்து கொண்டே இருப்போம் என்பதில் உறுதியுடன்  இருக்கின்றோம்.


*ஆசிரியர் எனும் புனிதமான  அறப்பணியின் மதிப்பை உணர முயற்சி செய்வோம்!*

 


அ.மாரிகணேஷ்,

வட்டாரச்செயலாளர் &

மாவட்டப் பொருளாளர்

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*,

திருவைகுண்டம் வட்டாரம்,

தூத்துக்குடி மாவட்டம்.

9943422906

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53