குழந்தை உலகம்-53

அக்கறை*

______________

"என் குழந்தை நன்றாகத்தான் இருந்தான். சில நாட்களாக அவன் தேவையில்லாமல் அடம்பிடிக்கின்றான். அழுது அழுது கரைகிறான். அவனுக்கு  என்ன நடந்தது. ஏன் திடீரென இப்படி ஆகிவிட்டான். வயது கூடக் கூட பக்குவம் வளர்வதற்கு பதிலாக , தேய்கிறதே.

நம் வேலையை நிம்மதியாய் பார்க்க விடமாட்டேன் என்கிறானே! என்ன செய்வது என்று புரியவில்லையே!" இவ்வாறு நாமும் சில சமயங்களில் புலம்பியிருப்போம்.  சில வீடுகளில் இதுவே தினசரி வாடிக்கையாக இருக்கலாம்.

இதற்கு என்ன தான் தீர்வு?

நம் குழந்தையிடம் நாம் மிகுந்த அன்பும், பாசமும் வைத்திருக்கிறோம்.  அதனால் குழந்தையை அளவுக்கு அதிகமாகவே கொஞ்சுகிறோம். இதன் மூலம் குழந்தையும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மன அமைதியுடன் செயல்படுகிறது. நம் குழந்தையை கவனிப்பதில் நம்மை விட உலகத்தில் வேறு யாரும் உயர்ந்தவர்கள் கிடையாது.

சில நேரங்களில்

நம்முடைய வேலைப்பளு அதிகமாகும் போது நம் குழந்தையை கவனிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்ட வாய்ப்புள்ளது.

அந்த நாட்களில் குழந்தையின் மன அமைதி நிலைதடுமாறுகிறது.

நாம் தான் நம் தாய்க்கு / தந்தைக்கு மிக முக்கியமானவன். தற்போது நம்மை விட அவர்களது வேலைதான் மிக முக்கிய இடம் பெறுகின்றது என்ற எண்ணம் உள்மனதில் உதயமாகி குழந்தையின் மன அமைதியைக் கெடுக்கிறது.

இத்தகைய சூழலில் நாம் , நம் குழந்தையை கவனிக்க முடியாமலும், வேலைப்பளு நெருக்கடியில் குழந்தையின்  அடம்பிடிப்புத் தொந்தரவால் குழந்தை மீது கோபம் கொள்கிறோம். இது நம் குழந்தையின் நிலையை மேலும் மோசமாக்கிவிடுகிறது.

நாம் செல்லமாக கொஞ்சிய நம் குழந்தையையே வெறுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

இதற்கு தீர்வு என்ன?

முதலில் நம் குழந்தையிடம் நாம் எப்பொழுதுமே அக்கறையுடன்தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை , நம் குழந்தையிடம் ஏற்படுத்த வேண்டும்.

வேலைப்பளு அதிகமாகும் நேரத்தில் நம் குழந்தையிடம் அந்தச் சூழலை முன்கூட்டியே சொல்லி வைத்துவிட வேண்டும்.

எந்த வயது குழந்தை என்றாலும் நிச்சயம் நம் மனநிலையை உணர்ந்து கொள்ளமுடியும்.

அவ்வப்போது நம் குழந்தையின் உள்மனம் நம்மை சோதித்து அறிய முற்படும்.

எப்படியென்றால்?

எத்தகைய சூழ்நிலையிலும் நம் தாய்/ தந்தை நம் மீது அக்கறையுடன் தான் இருக்கின்றனரா? என்பதை சோதித்தறிய சிறு சிறு கோரிக்கைக்காக அழுது பார்க்கும்.

அந்த நேரத்தில் இது ஒரு சிறு 

விசயம் இதற்காக தொந்தரவு செய்யாதே . எனக்கு இருக்கின்ற டென்சனுக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை என்று அவர்களை அலட்சியப்படுத்தினால்  குழந்தையின் உள்மனதின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டியது வரும்.

அதன் வெளிப்பாடுதான் அடம்பிடித்தல், தொடந்து அழுதல் போன்ற செயல்கள்.

அவர்களது உள்மனப்பிரச்சனையை அறியாமல் நாம் எரிச்சலடைந்து நம் குழந்தையை வெறுக்கும் நிலைக்கு ஆளாகிறோம்.

முதலிலேயே நம் குழந்தை நம்மிடம் வைக்கும் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் மீதான நம்முடைய அக்கறையை வெளிப்படுத்தினால், குழந்தையின் தொந்தரவு படிப்படியாகக் குறையும். எந்த காலத்திலும் , எந்தச்சூழ்நிலையிலும் நாம் அவர்கள் மீது அக்கறையுடன்தான் இருப்போம்  என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம்,
9943422906
arumariganeshu@gmail.com

Comments