குழந்தை உலகம்-77

குழந்தை உலகம்-77

ஆவணப்பதிவு

"வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே" என்று ஒரு சினிமா வசனம் உண்டு .

அதே போன்று ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனிப்பட்ட வரலாறுஉள்ளது.  

ஒவ்வொருவரும் தங்கள் மனதிற்குள் அந்த வரலாறை ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டமைத்து வருகின்றனர்.

பெரும்பாலும்

 அத்தகைய வரலாறு நேர்மறையானதாகவே கட்டமைக்கபடுகிறது.

இந்த உண்மையை அறிந்து என்ன பயன் ?

 நான் இந்த உண்மையை அறிந்ததால்  பெரிய பயனை  அனுபவித்தேன்.

என் வகுப்பில் ஒரு மாணவன் மிகுந்த உணர்ச்சிவசப்படுபவனாக இருந்தான். எந்த ஒரு விரும்பத்தகாத நிகழ்வுநடந்தாலும் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு யாரையாவது அடித்துவிடுவான். 

நான் அவனை கண்டித்தால் "வந்து பாரு" என்ற தொணியில் எதிர்த்து பேசுவான்.

  அது போன்ற சந்தர்ப்பங்களில்,  எத்தனையோ குழந்தைகளை ஆய்வு செய்கிறோம். நம்மால் இதற்குத் தீர்வு காண முடியவில்லையே என்று என்னை நானே  நொந்து கொள்வேன்.

அவன் தவறான நோக்கம்கொண்டவன் கிடையாது.   மனவளர்ச்சி குன்றியவனும் கிடையாது. சாதாரணநிலையில் நமது கருத்தை ஏற்றுக்கொண்டு பேசுவான்.   உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வழக்கம் போல் யாரையாவது அடித்துவிடுகிறான். 

 நான் பலமுறை அன்பாகவும் பேசிப் புரிய வைக்க முயற்சி செய்தேன், பயமுறுத்தியும் பார்த்தேன்,  அவனிடம் பேசாமலும் இருந்து பார்த்தேன்.  அவனை தனிமைப்படுத்திப் பார்த்தேன். எந்தவித பலனும் கிடைத்தபாடில்லை. அவனது செயல் நின்றபாடில்லை. ஒரு முறை அவனால் நான் உணர்ச்சிவசப்பட்டு ,

 "உனக்கு என்னதான் வேண்டும் . உனக்கு எது வேண்டுமானாலும் தந்துவிடுகிறேன். எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தந்துவிடுகிறேன். என் கையில் அணிந்திருக்கும் தங்க மோதிரத்தை வைத்துக்கொள் , பிற பிள்ளைகளை  மட்டும் தயவு செய்து அடித்துவிடாதே" என்று   கூறி, என் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி அவனிடம் வீசிவிட்டேன்.  இதன் மூலமாவது இந்த விசயம் எந்தளவிற்கு முக்கியத்துவமானது என்பதை அவனுக்கு உணர்த்த விரும்பினேன். அவன்  குழந்தை அல்லவா, அந்த மோதிரத்தை தொடக்கூட இல்லை.   அவ்வாறு செய்யமாட்டேன் என்று  மட்டும்  உறுதியளித்தான். 

மறுநாளே உணர்ச்சிவசப்பட்டு மீண்டும் ஒரு பெண் பிள்ளையை அடித்துவிட்டான் . அந்தப்பிள்ளை அழுகிறது.  இந்தக் கொடுமையிலிருந்து பிள்ளைகளை எப்படிதான் காப்பாற்றுவது? என்பது தெரியாமல் தினம் தினம்  வருத்தப்பட்டதுண்டு.

உணர்ச்சிவசப்படும்  நேரத்தில் அவன் தன்னை இழந்துவிடுகிறான்.  அவனது பெற்றோரின்  உணர்ச்சிவசப்பட்ட  இயல்புதான் இவனையும் இப்படிப்பட்ட ஒரு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. நாமும்  உணர்ச்சிவசப்பட்டால் அவனது செயல்பாடும் சரி என்றாகிவிடுமே என்ற அச்சத்தில் நானும் உணர்ச்சி வசப்படுவதில்லை.

இவனிடமிருந்து மற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். இவனையும் நான் மாற்றியாக வேண்டும்.

ஒரு பிள்ளையின் பெற்றோர் , இவன் மீண்டும் தன் பிள்ளையை அடித்தால் தன் பிள்ளையை வேறு பள்ளியில் சேர்த்துவிடுவதாக தன் பிள்ளையிடம் கூறி அனுப்புகிறார். அந்த அளவிற்கு இந்தப்பிரச்சனை எனக்கு பெரிய நெருக்கடியாக அமைந்தது. 

 காலாண்டுத் தேர்வு வந்தது. அனைத்து குழந்தைகளும் தேர்வு எழுதினர். நானும் உடனுக்குடன் விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தி வந்தேன். அத்துடன் அகமதிப்பீட்டு மதிப்பெண்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். அப்போது ஓடி வந்த அந்தப் பையன் "இந்த மதிப்பெண்களை எப்படி போடுகிறீர்கள்?. எனக்கு ஏன் மற்றவர்களைவிட குறைந்த மதிப்பெண்கள் போட்டுள்ளீர்கள் ?" என வாக்குவாதம் செய்தான். அப்பொழுது " உன் நடத்தைதான்  உனக்கான மதிப்பெண்ணாக மாறுகிறது. நீ மற்றவர்களை அடிக்கடி  அடிக்கின்றாய்.  அதனால் தான் உனக்கான அகமதிப்பெண்கள் குறைந்துவிட்டது" என்றேன். என்னிடம் கோபப்பட்டு பேசாமல் போய்விட்டான். மறுநாள் பள்ளிக்குள்  நுழையும் போதே அவன் என்னிடம் ஓடி வந்து "சார் நான் இனி யாரையும் அடிக்க மாட்டேன் . நல்லப்பிள்ளையாக நடந்து கொள்வேன். என் மதிப்பெண்களை குறைத்துவிடாதீர்கள்" என்று கூறினான். 

எனக்கு ஆச்சரியம் என்னைப் பார்த்ததும் முதல் வேளையாக இதைக் கூறுகின்றான் என்றால் அவன் நேற்றிலிருந்து எந்தளவிற்கு இதற்காக வருந்தியிருப்பான். 

அப்பொழுதுதான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. ஒவ்வொரும் தனக்கான வரலாறை தன் மனதிற்குள் கட்டமைத்துக் கொள்கின்றனர். அந்த வரலாற்றுக்கு எதிராக நாம் இன்னொரு வரலாற்றை  பதிவுசெய்யும் போது அல்லது ஆவணப்படுத்தும் போது அவர்களால் அதை ஏற்கமுடியவில்லை.

தான் பெறும் மதிப்பெண்கள்தான் தனக்கான வரலாறாக இந்தக் குழந்தை தன் மனதிற்குள் கட்டமைத்து வந்த உண்மை எனக்கு புலப்பட்டது.

வாசிப்புப் பயிற்சியில்  சரியாக வாசிக்கவில்லையென்றால்  சுமார் என்று பதிவேட்டில் பதிவதுண்டு. இந்தக் குழந்தை வாசித்துக் காட்டியபின் உடனடியாக என் அருகில் ஓடிவந்து என்ன பதிவிடுகிறார் என்று மிகுந்த ஆர்வத்துடன் ஓடி வருவான். ஒருநாள் சுமாராக வாசித்த அவனுக்கு சுமார் என்று பதிவிடத் தயாரான போது ஓடி வந்து தடுத்தான். "நான் மீண்டும் ஒருமுறை வாசிக்கின்றேன். தயவுசெய்து சுமார் என்று பதிவிடாதீர்கள்", என்று கூறியது என் நினைவிற்கு வந்தது. 

பொதுவாக நம்மை யாராவது நேரடியாக குறை கூறினால் கூட   நாம் அதை பெரிய விசயமாக உணர்வதில்லை.

அதே குறையை ஒரு பத்திரிக்கையிலோ அல்லது ஒரு கடிதத்திலோ பதிவு செய்துவிட்டால் மிகப்பெரிய தீங்கு நடந்துவிட்டதாக உணர்கிறோம்.

சாதாரணமாக நாம் செயல்படுவதற்கும் , வீடியோ கேமராவின் முன் நாம் செயல்படுவதற்கும்  வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது. ஏனெனில் வீடியோ நம்மை ஆவணப்படுத்துகிறது.  நம்முடைய  நேர்மறையான வரலாறு மட்டுமே ஆவணமாக பதிவு செய்யப்பட  வேண்டும் என்ற எண்ணம்தான் நம்மை அங்கு இயக்குகிறது. 

இந்த ஒரு உண்மையைத்தான் என் வகுப்பறையில் உள்ள அந்த ஒரு குழந்தையின் மூலமாக நான் கண்டுபிடித்துள்ளேன்.

பொதுவாக 

குழந்தை உலகம் கட்டுரைகளை நான் எழுதத் தொடங்கியதிலிருந்து  எந்த ஒரு குழந்தையின் பெயரையும் இதுவரையிலும் குறிப்பிட்டதில்லை. 

ஆவணப்படுத்துவதில் உள்ள இந்த உண்மைதான் இயல்பாகவே என்னை அவ்வாறு  தவிர்க்கச் செய்திருக்கிறது. 

தற்போது என் வகுப்பறையில் யாரும் அடிபடுவதில்லை, யாரும் அடிப்பதுமில்லை.

அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என் வகுப்பறை.

 ஆவணப்படுத்துவதில் புளிப்பு தட்டாதவாறு நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே!


அரு.மாரிகணேசு,

ஆசிரியர், தென்திருப்பேரை.

9943422906

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53