குழந்தை உலகம் -76
குழந்தை உலகம் -76
மனதிற்குள் வேலை
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"
என்று கூறுவார்கள்.
இதை அப்படியே மாற்றிக்கூறினால்
"முகத்தில் தெரிபவைதான் அகத்தில் இருக்கும்"
என்பதாகக் கூட பொருள் கொள்ளலாம்.
குழந்தையிடம் எந்தவிதமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்றாலும், குழந்தையின் மனதிற்குள் முதலில் மாற்றம் நிகழ வேண்டும்.
நான் சில ஆசிரியர்களிடம் கூறும் போது குழந்தையின் மூளைக்குள் வேலை செய்யும் பணி ஆசிரியர் பணி என்று அடிக்கடி கூறுவேன்.
மனதிற்குள் என்பதையே புரிந்து கொள்ள எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மூளைக்குள் வேலை என்று கூறுவேன்.
குழந்தை தானே மனதிற்குள் அல்லது மூளைக்குள் வேலை செய்ய வேண்டும் ஆசிரியர் எப்படி மூளைக்குள் அல்லது மனதிற்குள் சென்று வேலை செய்ய முடியும்? என்று சிலர் நினைக்கலாம்.
பன்னெடுங்காலமாக இது தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆசிரியரும் குழந்தையின் மனதிற்குள்தான் பணி செய்து வருகின்றனர்.
என் வகுப்பறையில் யாரிடமும்,
வகுப்பறையை அழகுபடுத்துவதற்காக எதையும் நேரடியாக கூறுவதில்லை. அதே போல் கையெழுத்து அழகாக இருப்பதற்காகவும் எந்த வித நேரடி பயிற்சியும் வழங்குவதில்லை.
ஆனால் உலகின் படைப்புகளில் இருக்கும் அழகை அவ்வப்போது மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வேன்.
இதன் மூலம் குழந்தைகளின் மனதில் உலகை அழகாக பார்க்கும் பார்வை வளர்ந்துவிடுகிறது.
இந்தப் பார்வை வகுப்பறையிலும் அவர்கள் எழுதும் எழுத்திலும் திரும்பும் போது அவை அழகாகின்றன.
இந்த உண்மையை நான் மிகத்தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். பிற ஆசிரியர்களைப் போன்று நாம் கையெழுத்து பயிற்சி புத்தகத்திற்கு அதிகம் கவனம் கொடுப்பதில்லையே, ஆனால் நம் வகுப்பறையில் பயிலும் மாணவர்கள் சிறிது காலத்திலேயே தன் கையெழுத்துகளை அழகாக்குவதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றரே, இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? என்று சிந்தித்ததுண்டு.
தற்போது தான் புரிகிறது நம் பணி குழந்தைகளின் மனதிற்குள் நேர்த்தியாக நடந்துள்ளது என்று. இதன் விளைவு வகுப்பறை தூய்மையாகிறது. மேலும் வகுப்பறையை அழகுபடுத்துகின்றனர். வீட்டையும் சுற்றப்புறத்தையும் அழகுபடுத்துகின்றனர். இந்த மாற்றங்கள் அனைத்தும் குழந்தையின் மனதிற்குள் மாற்றம் ஏற்பட்டதை வெளிப்படுத்துகின்றன.
தூய்மை இந்தியா போன்ற மக்கள் இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்றால் சட்டங்களாலோ, திட்டங்களாலோ பெரிய அளவில் தேவையில்லை., மக்கள் மனதில் அழகுணர்வுப் பார்வை ஏற்பட நாம் பணி செய்தால் போதுமானதுதான் என்றே கருதுகிறேன்.
குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்களை விரும்பினால், அவர்களது மனதிற்குள் சென்று பணி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அனைவரும் வளர்த்துக்கொள்ளுங்கள். எந்த வித மாற்றத்தையும் குழந்தையிடம் ஏற்படுத்த முடியவில்லை என்றுறு நீங்கள் கூறுகின்றீர்கள் என்றால் நீங்கள் அவர்களது மனதிற்குள் சென்று பணி செய்யவில்லை என்பதே பதிவாக இருக்கும்.
குழந்தையின் மனதிற்குள் செல்வது அவ்வளவு எளிதான செயல் கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அது நம்மால் முடியவில்லை என்றால் குழந்தையிடம் மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.
குழந்தையின் மனதிற்குள் செல்லத் தயாராவோம்!.
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
9943422906
Comments
Post a Comment