குழந்தை உலகம்-75
குழந்தை உலகம்_75
உள்ளுணர்வு
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ளுணர்வு என்ற ஒன்று எப்பொழுதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கும். ஏறக்குறைய
அனைத்து மனிதர்களும் தன்னிடமுள்ள உள்ளுணர்வு சொல்வதைத்தான் அப்படியே கேட்டு நடக்கின்றனர்.
உள்ளுணர்வுக்கு உருவம், மொழி என்று எதுவுமே கிடையாது.
"இந்த இடத்தில் நிற்பது எனக்கு சரியாகப்படவில்லை, எனவே கிளம்புகிறேன்" என்பது போன்று காரணகாரியம் எதுவுமின்றி முடிவு செய்து நகர்வதை நாம் அனுபவித்திருப்போம்.
என்னதான் பயிற்சியளித்தாலும், பாடம் கற்பித்தாலும் உள்ளுணர்வு கூறுவதை மீறி நம்மால் எதையும் செய்துவிட முடியாது.
இது போன்ற உள்ளுணர்வு சிலருக்கு மிக அதிக செவ்வாக்கு மிக்கதாக இருக்கும் . சிலருக்கு சற்றே செல்வாக்கு குறைந்ததாக இருக்கலாம். ஆனால் உள்ளுணர்வின் ஆதிக்கத்தை உண்மை என்று நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
என் சகோதரியின் மகன் நன்றாகப் படிக்கக்கூடியவன். நல்ல ஒழுக்கமுள்ளவன். மிகுந்த திறமையானவன். மனமுதிர்ச்சி பெற்றவன்.
தொடக்கநிலை வகுப்பு முடிந்த பிறகு, வேறு ஒரு உயர் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டான். நல்ல சூழல் கொண்ட தனியார் பள்ளி அது. பெரிய நபர்களின் பரிந்துரை பெற்றுதான் அந்தப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது.
சேர்ந்த முதல் நாளில் இருந்து அவன் வகுப்பறைக்குள் இருந்ததே கிடையாது.
தலைவலி, வயிற்று வலி, நெஞ்சு வலி போன்றக் காரணங்களைக் கூறிவிட்டு வகுப்பறைக்கு வெளியிலேயே அமர்ந்திருக்கிறான். சிறந்த மனமுதிர்ச்சி பெற்ற அவனால் அதற்கு உணமையான காரணத்தைக் கூற முடியவில்லை. பள்ளியைப் பிடிக்கவில்லையா ?
என்ற கேள்விக்கு ,"பிடித்திருக்கிறது" என்றே பதில்கூறுகின்றான்.
"ஆசிரியர்களை பிடித்திருக்கின்றதா?" என்றால் அதற்கும் "படித்திருக்கின்றது" என்றே பதில் கூறுகின்றான்.
"வேறு பள்ளியில் சேர்ந்து படிக்கின்றாயா?" என்றால் அதற்கும் வேண்டாம் என்கின்றான். ஒருவாரம் இவ்வாறாக வகுப்பறைக்கு வெளியிலேயே இருந்து விட்டு வருகின்றான்.
நான் அவனிடம் சில அறிவுறைகள் கூறி அவனை உற்சாகப்படுத்தியதில் மறுநாள் வகுப்பறைக்குள் சென்று உட்கார்ந்திருக்கிறான்.
இயல்பாகிவிடுவான் என்று அனைவரும் நினைத்திருந்த நேரத்தில் மீண்டும் பள்ளியிலிருந்து அழைப்பு வருகிறது. அவன் வகுப்பறையில் திடீரென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றான் என்று.
அதன்பிறகு, உண்மையாகவே அவனது மனதிற்கு (உள்ளுணர்விற்கு) இந்தப்பள்ளி பிடிக்கவில்லை போலிருக்கிறது என்பதையும், அவனால் அதை வெளிப்படுத்த முடியவில்லை என்பதையும் புரிந்து கொண்டு அவனது பெற்றோர் வேறு பள்ளியில் சேர்த்துவிட்டனர். தற்போது மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பள்ளிக்குச் சென்று வருகிறான். வகுப்பறையில் முதல் மதிப்பெண் பெறுகின்றான்.
மிகவும் இயல்பாக இருக்கின்றான்.
இந்தச் சம்பவம் தான் , ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளுணர்வு மிகவும் வலிமையானதாக இருக்கின்றது, என்பதை எனக்கு உணர்த்தியிருக்கிறது.
நாம் விரும்புவதை நம் குழந்தைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக குழந்தைகளைக் கட்டாயப்படுத்துகிறோம்.
ஆனால் அவனது உள்ளுணர்வு என்ன நினைக்கிறது என்பதை நாம் கவனிப்பதில்லை.
குழந்தையின் வாழ்க்கைதான் முக்கியம் என்று கருதிய பெற்றோராக அவர்கள் இருந்ததால் அந்தக் குழந்தைக்கு ஒரு விடுதலை கிடைத்தது.
காரணமே இல்லையென்றாலும் , அதைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியவில்லையென்றாலும் அவனது உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு சரியான முடிவை எடுத்துள்ளனர்.
இது போன்ற சந்தர்ப்பங்களை நம் முன்னோர்கள் மனக்கோளாரு, செய்வினைக் கோளாரு, தெய்வக்குத்தம், பேய், கிரகம் சரியில்லை, நேர்த்திக்கடன் போன்ற பல பண்பாட்டுச் செயல்முறையின் படி எதிர்கொண்டு, வெற்றி பெற்றுவந்தனர். தற்போதும் அது போன்று தான் தொடர்கிறது.
இவை அனைத்தும் மனிதர்களின் உள்ளணர்வைக் கண்டறிந்து அவனுக்கு விடுதலை கிடைக்க உதவிய வழிமுறைகள் தான்.
எனவே அவற்றைக் குறை கூறுவதும் சரியல்ல. எதிர்காலத்திலும் இவை போன்ற பண்பாட்டு வழிமுறைகள் அனைத்திற்குமானத் தேவைகள் இருந்துகொண்டே தான் இருக்கப்போகிறது.
சிறு குழந்தையிலிருந்தே நம் குழந்தையின் உள்ளுணர்வு எப்படிப்பட்டதாக இருக்கின்றது என்பதை நாம் உள்ளார்ந்து ஆலோசித்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனடிப்படையில் செயல்பட்டாலே போதும், வேறு வழிமுறைகள் நமக்கு அவசியமில்லாமல் போய்விடும்.
நம்முடைய அறிவு, திறமை போன்றவற்றின் உதவியால் நம் உள்ளுணர்வுக்கு எதிராக நாம் செயல்பட்டால் பல மனத்துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். இறுதியில் நம் உள்ளுணர்வு தான் வெற்றியும் பெறும்.
அதனால்
நாமும் நம் உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு அதன் திசையிலேயே செயல்பட்டால் மனநிறைவான வாழ்க்கை வாழமுடியும்.
இதைத்தான் ஆத்ம திருப்தி என்று நம் முன்னோர்கள் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய ஆத்ம திருப்தியை மையப்படுத்தியே நாமும் , நம் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவையும் எடுத்துச் செயல்படுகின்றோம். இதேபோல்
குழந்தைக்கும் உள்ளுணர்வு உண்டு என்பதை உணர்ந்து செயல்படுங்கள். அதன்பிறகு உங்கள் வாழக்கையும், உங்கள் குழந்தையின் வாழ்க்கையும் ஆனந்தமயமானதாக மாறிவிடும்.
வெற்றி என்பது எளிமையான ஒன்றாகவும், இனிமையான ஒன்றாகவும் மாறிவிடும். வாழ்த்துகள்.
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
9943422906
Comments
Post a Comment