குழந்தை உலகம்-74

குழந்தை உலகம் -74

அற்புதமானவன்

ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு குடும்ப சூழல்களில் வளர்கின்றனர்.

இருப்பினும் அனைத்து குழந்தைகளும் இறைவனின் அம்சங்களே.

அந்த வகையில் குழந்தைகள் அனைவரும் அற்புதமானவர்கள்.

குழந்தைகள் இந்த உலகத்தின் அற்புதம் என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.

அதன் பிறகு அந்த உணர்வை நம் குழந்தைகளிடமும் ஏற்படுத்த வேண்டும்.

தான் ஒரு அற்புதமானவன் என்பதை   குழந்தை  உணரத்தொடங்கிவிட்டால்,

ஒருவித பெருமிதம் மனதிற்குள் ஏற்படும். இந்தப் பெருமிதம் அவர்களை தாழ்வு

மனப்பான்மையிலிருந்து பாதுகாக்கும்.

குழந்தைகள் அற்புதமானவர்கள் என்பதை நாம் உணர்ந்துவிட்டால் அவர்களை அவமரியாதை செய்ய மாட்டோம்.

அலட்சியம் செய்ய மாட்டோம்,

இழிவாக பார்க்க மாட்டோம்.

குழந்தைகள் நமக்கான அடிமைகள் என்ற எண்ணம் கூட பலரது மனதில் இருக்கிறது.

அதனால்தான் சிலர் காட்டுமிராண்டி போன்று குழந்தைகளிடம் நடந்துகொள்கின்றனர்.

சிலர் மனிதப்பிறவியையே பாவப்பிறவி என்பதாக நம்புகின்றனர். அவர்களது குழந்தைகளும் அவ்வாறு நம்ப ஆரம்பித்துவிட்டால் தன்னைப்பற்றிய பெருமிதம் அந்தக் குழந்தைகளுக்கு உருவாகாது. அவர்கள் சமூகப் பொறுப்பின்றி வளர்கிறார்கள். இதனால் அவர்களிடம்  சுயநலம் மேலோங்கிவிடுகிறது.

தன்னை அற்புதமானவன் என்று நம்புவர்கள் தான் ,பிறரையும் அவ்வாறே மதிக்கத்தோன்றும்.

இதனால் மனித நேயம் வளரும்.

இந்த உணர்வு எந்த வகையில் நமக்கு பயன்படப்போகிறது?

நான் என் குழந்தைகளிடம்  தான் அற்புதமானவன், பெருமைக்குரியவன், மரியாதைக்குரியவன், புனிதமானவன் என்பது போன்ற உணர்வை வளர்க்க முயற்சி செய்கிறேன்.

இதனால் பிற குழந்தைகளையும் , பிற ஜீவராசிகளையும் மதித்து நடக்கும் பண்பு வளர்ந்து வருகிறது.

'குழந்தைகள்   அறபுதமானவரகள் என்ற காரணத்தினால் தான் நான் யாரையும் அடிப்பதில்லை ' என்று குழந்தைகளிடமே கூறிவிடுகிறேன்.

அவர்களுக்கு முதலில் தலைகால் புரியாமல் குதிப்பார்கள்.

போகப்போக தன்னுடய பொறுப்பு என்ன என்பதை படிப்படியாக உணர்ந்து இறுதியில் நமக்கு எந்த கவலையும் இல்லாத வகையில் மிகுந்த பொறுப்புடன் நடக்க ஆரம்பித்துவிடுவர்.

இந்த உலகை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர்.

பிற குழந்தைகளை  தங்கள் உறவினர்கள் போன்று அன்பு செலுத்துகின்றனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சனைகள் எழுவதில்லை.  பெரியோர்களை மதிக்கின்றனர். 

தங்களது சுற்றுப்புறத்தை பொறுப்புடன் பராமரிக்கின்றனர்.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் பொதுநல எண்ணம் மேலோங்கி விடுகிறது.

தங்களை தாங்களே பராமரித்துக்கொள்ளும் சுயசார்பு பெருகுகிறது.

சிறு சிறு குற்றங்களை (பொய் கூறுதல், திருடுதல், பிறரை துன்புறுத்துதல்)   அறியாமல் செய்து, அதை நாம் சுட்டிக்காட்டினால் 

இந்தப் பெருமித உணர்வு அந்தக் குற்றத்தை மீண்டும் அவர்கள் செய்யாதவாறு தடுக்கிறது.

தனக்கான மதிப்பு உருவாகியிருப்பதால் அதை  தவறவிடக்கூடாது என்ற எண்ணம் அவர்களை நெறிப்படுத்துகிறது.

சாதனை படைக்கும் வேட்கை உருவாகிறது. அதன் மூலம் எதிர்காலத்தில் பேரும் , புகழும் பெற இந்த பெருமித உணர்வு பயன்படும்.

குழந்தைகளிடம் தான் அற்புதமானவன் என்ற பெருமித உணர்வை உருவாக்கிய பின்னர் 

 "நம்மைப் போன்றே பிறரும்   அற்புதமானவர்கள்"

 என்ற எண்ணத்தையும் உருவாக்கிவிட வேண்டும்.  இல்லையென்றால் எதிர்காலத்தில் பிறரிடம் ஆண்டான் அடிமை மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது.

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது"

என்ற ஔவையின் வாக்குப்படி மனிதப்பிறவியே ஒரு அற்புதப்பிறவிதான்.

எனவே குழந்தைகளிடம் அற்புதமானவன் என்ற பெருமிதத்தை உருவாக்குவது இயற்கைக்கு ஏற்றதுதான்.

  

அரு.மாரிகணேசு,

ஆசிரியர்,

தென்திருப்பேரை,

9943422906

arumariganeshu@gmail.com

arumariganeshu.blogspot.com

 

      

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53