குழந்தை உலகம்-73

குழந்தை உலகம் _73

பொதுச்சிந்தனை

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைகள் வேறுபட்டதாக இருக்கும். உணவுக்குக் கூட போராடும் நிலையில் உள்ள மனிதர்களுக்கு உணவுதான் அடிப்படைத்தேவையாக இருக்கும். உணவு, உடை , இருப்பிடத் தேவைகள் பூர்த்தியானவர்களுக்கு ஆடம்பர வசதிகள் முன்னுரிமைத் தேவையாக இருக்கும்.

இவை பூர்த்தியானால் மனநிறைவான வாழ்க்கை என்பது அடுத்தத் தேவையாக இருக்கும். 

இறுதியாக சமூக அந்தஸ்து என்பது உச்சபட்சத் தேவையாக இருக்கும்.

இந்த நிலையை எட்டும் போதுதான் ஒவ்வொரு மனிதனும் உன்னதமான இடத்தை அடைகிறான்.

ஆனால் ஒரே நாளில் இந்த இடத்தை யாராலும் எட்டிவிட முடியாது.

அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் நிலையிலிருந்து  இறுதி நிலை வரை சமூக அந்தஸ்திற்காகவும் சேர்த்து  பாடுபட்டால் மட்டுமே 

இந்த  உன்னத நிலையை எட்ட முடியும்.

ஏற்கனவே சமூக அந்தஸ்திற்கான ஒரு அடிப்படைக் கட்டமைப்பாக சுயசார்பு என்பதை குழந்தை உலகம் 68 ல் குறிப்பிட்டிருந்தேன்.

அது தொடர்பான இன்னொரு கட்டமைப்புதான்   பொதுச்சிந்தனை  என்பது.

'தான் ஒரு தனிப்பட்ட மனிதன் கிடையாது,  இந்த உலகத்திற்கே உரிமையான பொதுமனிதன்' என்ற பார்வையுடன் சிந்திக்கும் மனப்பான்மைதான் பொதுச்சிந்தனை என்பதாக நான் பார்க்கின்றேன்.

இந்தச் சிந்தனை  அவரவர் குடும்பச் சூழல் , நண்பர்கள் , சுற்றுப்புறத்தார், பள்ளிச் சூழல் என பலவழிகளில் நமக்கு வந்து சேரலாம்.

அதே சமயம் நாமும் நமது குழந்தைகளுக்கு இது போன்ற பொதுச்சிந்தனை வளர ஊக்கப்படுத்துவதும் அவசியமாகிறது.

தானுண்டு , தன் வேலையுண்டு என்ற வாழ்க்கை வாழ்பவர்கள்தான் உலகில் பெரும்பாலானவர்களாக இருக்கிறார்கள்.

இதனால் சுயநலம் மட்டுமே பெருகி, இந்த உலகத்தை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றிவருகிறது.

விவேகானந்தர் போன்ற சிந்தனையாளர்கள் நூறு பேர் இருந்தால் நம் நாடு உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்று நினைப்பவர்கள் , தன் மகன் அல்லது மகள் விவேகானந்தர்  போன்று  
சிந்திப்பதை  விரும்பமாட்டார்கள். மாறாக அந்தச் சிந்தனையை ஆரம்பத்திலேயே தடுத்துவிடுவார்கள்.

ஆனாலும் தன் மகன் உலகம் போற்றும் மாமனிதனாக வளர வேண்டும் என்பதை மட்டும் தன் ஆசையாக வெளிப்படுத்திக்கொண்டே இருப்பர்.

இதற்காக விவேகானந்தர் போன்று துறவியாக மாற வேண்டும் என்று நான் கூறுவதாகக் கருத வேண்டாம்.

மனிதனின் சமூக அந்தஸ்து என்ற தேவை பூரத்தியடைவதற்காக பொதுச்சிந்தனை என்பது அவசியம் என்றே கூறுகிறேன்.

குழந்தைகளிடம் பொதுச்சிந்தனை ஆரம்பத்திலிருந்தே வளர வேண்டும் .

தாகமாயிருப்பவர்களுக்கு தண்ணீர் தருவது,

பசிப்பவர்களுக்கு உணவளிப்பது,

தன் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது,

பிறருக்குக் கற்றுக்கொடுப்பது,

மரக்கன்று நட்டு பராமரிப்பது,

மழைநீர் சேமிப்பது,

பிறரிடம் அன்பான வார்த்தைகள் பேசுவது,

வயதானவர்களுக்கு உதவிகள் செய்வது,

பிறருக்கு தொந்தரவில்லாமல் வாழ்வது,

 மக்கள் தொண்டே , மகேசன் தொண்டு என்பதான மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது,

பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் சேவையாற்றுவது

 போன்ற பலவும் பொதுச்சிந்தனையின் வெளிப்பாடுகள் தான்.

இவற்றை சிறுவயதிலிருந்தே நாம் ஊக்கப்படுத்தினால் உலகம் போற்றும் உன்னத மனிதனாக நம் பிள்ளை உயர்வதை யாராலும் தடுத்துவிட முடியாது.

அப்பொழுது அவர்களது சமூக அந்தஸ்து என்ற வாழ்நாள் தேவையும் நிறைவடைந்திருக்கும்.

நான் குழந்தைகளிடம்

*"மனிதர்கள் அனைவருக்குள்ளும்  இறைவன் இருக்கின்றான். மனிதர்களைத் துன்புறுத்தினால் இறைவன் துன்பப்படுவான்"*  

என்பதை  அடிக்கடி  கூறிக்கொண்டே இருப்பேன்.

இந்த எண்ணம் அவர்களிடம் பொதுச்சிந்தனையை நிச்சயம் தூண்டும் என்பது என் நம்பிக்கை .

பொதுச்சிந்தனை பெருகுவதன் மூலம் மனித நேயம் பரவலாகும் .

எனவே 

நம் பிள்ளைகளிடம் பொதுச்சிந்தனையை வளர்த்தெடுப்போம்!

சமூக அந்தஸ்தை அடையச் செய்வோம்!

அரு.மாரிகணேசு,

ஆசிரியர்,

தென்திருப்பேரை.

9943422906

arumariganeshu@gmail.com

arumariganeshu.blogspot.com

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53