குழந்தை உலகம் _72
குழந்தை உலகம் _72
*பொறுமை*
"பொறுத்தார் பூமி ஆழ்வார்"
"பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்"
" பொறுமை கடலினும் பெரிது"
போன்ற பல பொன்மொழிகள் பொறுமை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் விளக்கியுள்ளது.
குழந்தை பருவத்திலேயே பொறுமை என்ற குணத்தை அல்லது பண்பை வளர்க்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு பொறுமை பற்றிய புரிதல் ஏற்பட வேண்டும் என்றால் நாம் முதலில் அதற்கான முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
நம்மைப்பார்த்துத்தான் குழந்தைகள் பொறுமையைக் கற்றுக் கொள்வார்கள். நம் வாழ்வில்
நாம் பொறுமையைக் கடைபிடிப்பது என்பது மிகப்பெரிய சவாலான இலக்குதான்.
பொறுமையை நாம் இழக்கும் போதுதான் வன்முறையில் இறங்குகிறோம்.
அப்படியென்றால் பொறுமைதான் , கோபம் என்ற கொடிய அரக்கனின் பிடியில் நாம் சிக்கிவிடாத வகையில் பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது என்பது தெரிகிறது.
பொறுமையை நாம் எப்போது இழக்கிறோம்?
பொறுமை கூடுகிறது என்கிறோம் , குறைகின்றது என்கிறோம். எப்படி கூடுகிறது ? எப்படி குறைகின்றது? எதைப்போல் கூடுகிறது? எதைப்போல் குறைகிறது?
இவை அனைத்தையும் குழந்தைகள் புரியும் வகையில் விளக்க வேண்டும் என்று முடிவு செய்து தொடர்ந்து பொறுமை பற்றிய ஆய்வில் ஈடுபட்டேன்.
முடிவில் பொறுமையை நீர்த்தேக்கத்தில் தேக்கப்படும் தண்ணீரோடு ஒப்பிட்டு குழந்தைகளுக்கு விளக்கம் அளித்தேன்.
நீர்த்தேக்கத்தில் தண்ணீர் கூடுவது போன்று நம்மிடம் இருக்கும் பொறுமை கூடும் தன்மையுடையது என்றும், தண்ணீர் குறைவது போன்று குறையும் என்றும் விளக்கமளித்தேன்.
கடைசி சொட்டு பொறுமை நம்மிடம் இருக்கும்வரைதான் நம்மை கோபம் என்ற அரக்கன் பிடிக்க மாட்டான்.
ஒரு சொட்டு பொறுமை கூட இல்லாமல் அனைத்தையும் நாம் இழந்துவிட்டால் கோபத்திடம் நாம் நம்மை இழந்துவிடுவோம் என்பதையும் கூறினேன்.
அனைவருமே தன்னிடம் இருக்கும் பொறுமையைக் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், பொறுமையை அதிகரிக்கும் செயல்களிலும் ஈடுபட வேண்டும்.
அதே போல் பிறரது பொறுமையையும் குறைக்காதவகையில் நடந்து கொள்ள வேண்டும். விரும்பினால் பிறரது பொறுமை கூடுவதற்கான செயல்களையும் செய்யலாம்.
இவ்வாறு கூறி "உன் பொறுமையைப் பாதுகாத்துக் கொள் , என் பொறுமையை குறைத்துவிடாதீர்கள்".
என்றும் வேண்டுகோள் விடுத்தேன்.
இடையில் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக குறும்புகள் செய்து கற்பித்தல் பணிக்கு இடையூறு செய்தால் "தம்பி உன்னுடைய ஒழுங்கீனச் செயல் எனது பொறுமையைக் குறைக்கின்றது" என எச்சரிக்கையும் செய்வேன்.
அடிக்கடி இது போன்று எச்சரிக்கை செய்வது பொறுமைக்கான மதிப்பை இழக்கச்செய்வதுடன், நம்முடைய மதிப்பையும் குறைத்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது.
நமது ஆசிரியரின் பொறுமையை முழுமையாக இழக்கச்செய்தால் என்ன செய்வார்? என்று பார்க்கலாம், என்ற ஆர்வத்தில் சிலர் விரும்பத்தகாத வகையில் செயல்படுவார்கள்.
இந்த இடத்தில்தான் அனைவரும் தனது கோபத்தின் விளைவுகளை குழந்தையிடம் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.
நான் அப்பொழுதுகூட குழந்தையிடம் வன்முறையில் இறங்குவதை தவிர்க்கவே முயற்சி செய்கிறேன்.
"உன்னால் எனது பொறுமையை நான் இழந்துவிட்டால் நீ என்னுடைய அன்பை இழக்க வேண்டியது வரும்" என்று எச்சரிக்கை செய்வேன்.
சில மாதங்களில் குழந்தைகளிடம் மிகச்சிறந்த மாற்றம் நிகழத்தொடங்கியது.
சில குழந்தைகள் என்னிடம் வந்து
"இது போன்ற நல்ல செயல்கள் நான் செய்துள்ளேன் இதன் மூலம் உங்கள் பொறுமை கூடியிருக்கிறதா ?" என கேட்டுச் செல்கின்றனர்.
இது என் வகுப்பறையை சொர்க்கமாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.
எனவே நாம் நம்முடைய பொறுமையைக் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், பிறரது பொறுமையையும் முடிந்த அளவு குறைக்காத வண்ணம் செயல்படுவதன் மூலம் நம் பூமியை நிச்சயம் சொர்க்கமாக மாற்ற முடியும்.
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
9943422906
arumariganeshu.blogspot.com
Comments
Post a Comment