குழந்தை உலகம் -71
தீதும், நன்றும்
பிறரை குற்றம் , குறை கூறுவது என்பது நம்மில் பலருக்கும் இருக்கின்ற ஒரு பழக்கம்.
பிறரை குறை கூறுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
நம்மை யாரும் குறை கூறிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வால் பிறரை குறைகூறுவதும் உண்டு.
நாம் மிகவும் சரியாக நடக்கிறோம் என்ற அதீத நம்பிக்கையால் பிறரை குறை கூறுவதும் உண்டு.
நம்முடைய தவறை மறைப்பதற்காக பிறரை குறை கூறுவதும் உண்டு.
சோம்பேறித்தனம் அதிகம் உள்ளவர்கள் தங்கள் மீது யாருடைய கவனமும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தாலும் பிறரை குறை கூறுவதும் உண்டு.
எப்படியாக இருந்தாலும் பிறர் மீது குற்றம் , குறை கூறுவது நேர்மறையான செயல் கிடையாது என்பதை அனைவரும் அறிவர்.
பிறர் மீது குற்றம், குறை கூறுபவர்களால் தன் மீது இருக்கும் குறையை அறியமுடியாதவர்களாக இருக்கிறார்கள். இது அவர்களது வளர்ச்சியை பாதிக்கக்கூடிய ஒரு தன்மையாக இருக்கிறது.
வகுப்பறையில் குழந்தைகள் பிறர் பற்றிய குற்றச்சாட்டைக் கூறுவது இயல்பானச் செயல். தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு கூறும் பழக்கம் வளர்ந்தால் அது குழந்தையின் வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும்.
எனவே பிறர் மீது குற்றம் கூறும் பழக்கத்தை நாம் ஊக்கப்படுத்தக்கூடாது.
குழந்தைகளின் குற்றச்சாட்டை நாம் குருட்டுத்தனமாக புறக்கணிப்பதும் எதிர்விளைவை ஏற்படுத்திவிடும்.
ஆனாலும் குற்றச்சாட்டு கூறும் பழக்கத்தை நாம் மடைமாற்றித்தான் ஆக வேண்டும்.
இதற்கு நம் முன்னோர்கள் கூறிய வழிகளே நமக்கு பெரிதும் உதவும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியமான புறநானூறு நூலில் வரும் கணியன்பூங்குன்றறனார் அவர்களின் பாடலில் ஒரு வரி
" தீதும் நன்றும் பிறர் தர வாரா."
நறுந்தொகை நூலில் அதிவீரராமபாண்டியன் அவர்களின் பாடலில் வரும் வரி
"பெருமையும், சிறுமையும் தான் தர வருமே."
இரண்டு பாடல்களிலும் ஒரே பொருள்தான்.
நமக்கு நடக்கும் நல்லதுக்கும் , கெட்டதுக்கும் நாம் மட்டுமே காரணம் என்பதுதான் நம் முன்னோரின் வாக்கு.
இந்தப் பாடலை, குழந்தைகளுக்குக் கூறி , நம் இன்ப, துன்பங்களுக்கு நாம் தான் காரணம் என்றும், பிறரை குற்றம், குறை கூறுவது நம்மை நாமே குற்றம் கூறுவதற்கு சமம் என்றும் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் சுட்டிக்காட்டினேன்.
தற்போது குழந்தைகள் பிறரை குற்றம் கூறுவது குறைந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தன்னை மேம்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"
என்பது கொன்றை வேந்தன் நூலில் ஔவையார் கூறிய வாக்கு.
குற்றம் கூறும் பழக்கம் உள்ளவர்களிடம் யாரும் நெருங்கிப் பழகமாட்டார்கள்.
மனிதன் புனிதமானவன்.
மனித உறவுகள் போற்றப்பட வேண்டிய பெருமைக்குரியவை.
குழந்தை பருவத்திலேயே மனிதர்களை குற்றம், குறை கூறும் பழக்கத்தை மடைமாற்றினால் மனித உறவுகள் பெருகும், வலுப்படும்.
தன்னை மேம்படுத்தும் சிந்தனை உற்பத்தியாகும். இது குழந்தையின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கும்.
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
9943422906
Comments
Post a Comment