குழந்தை உலகம்-70


*திக்குவாய்*

மொழித்திறன் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய சிக்கல்களுள் ஒன்று திக்குவாய்.

திக்குவாய் என்பது பிறவிக்குறைபாடு கிடையாது.

உடலளவிலோ அல்லது மனதளவிலோ ஏற்படக்கூடிய பாதிப்புகளால் இது ஏற்படுகிறது.

 ஒரு வயதிலிருந்து , மூன்று வயதுவரை மொழித்திறன் மிக அதிக அளவு வளர்கிறது . அந்த வயதில் குழந்தைகளுக்கு முழுச் சுதந்திரமும், வாய்ப்பும் வழங்கினால் இது போன்ற மொழித்திறன் குறைபாடு ஏற்படாது.

இரு மொழி பேசக்கூடிய வீடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மனக்குழப்பம், 

  திக்குவாய் ஏற்படக் காரணமாக அமைந்துவிடும்.

எனவே வீடுகளில் குறைந்தபட்சம் மூன்று வயது வரையிலாவது தாய்மொழியிலேயே பேசிப்பழகுவதால், இது போன்ற குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்க இயலும்.

குழந்தை  தானே முயன்று பேசக்கூடிய வார்த்தைகளில் குற்றம் கண்டுபிடித்து அவர்களைக் குறை கூறுவது , அவர்களது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி,  அவர்களுக்கு இது போன்ற மொழித்திறன் குறைபாட்டை ஏற்படுத்தக்   காரணமாக அமைந்துவிடுகிறது.

எனவே குழந்தைகள் பேசக்கூடிய வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதற்கு மாற்றாக நாம் சரியான வார்த்தைகளைப் பேசி அவர்களது கவனத்தை ஈர்ப்பதன் மூலம் , குழந்தைகளின் தவறுகளை இயல்பாகவே சீர்செய்ய முடியும்.

பேசுதல் திறன் என்பதே  "போலச்செய்தல்"  என்ற பழக்கத்தால்தான் வளர்கிறது. நாம் சரியாக பேசினாலே குழந்தைகளுக்கு மொழித்திறனை வளர்க்கமுடியும்.

என் வகுப்பறையில் நன்றாக படிக்கக்கூடிய ஒரு குழந்தை திக்குவாய் குறைபாட்டுடன் இருந்தது. அந்தக்குழந்தையை தொடர்ந்து ஆய்வு செய்து வந்ததில் அந்தக் குறைபாட்டை நீக்கும் வழி கிடைத்தது. தாய், தந்தையின் மீது ஏற்பட்ட அதிகப்படியான பயம் காரணமாகவே அந்தக்குழந்தைக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கும் என்பதைக் கண்டறிந்தேன்.

இதைச் சரிசெய்வதற்காக அந்தக் குழந்தையின் பயத்தைப் போக்கும் வழிகளைக் கையாண்டேன்.

அந்தக்குழந்தை பேசுவதில் , வாசிப்பதில் ஏற்படும் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டவில்லை. 

அந்தக்குழந்தையின் பயம் குறைந்தபிறகும் திக்குவாய் நின்றபாடில்லை.

அவளது மனதில்

 "தான் ஒரு திக்குவாய்க்குழந்தை" என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது.

அவள் பேசும்போதும், வாசிக்கும் போதும் அந்த எண்ணம் அவளை ஆக்கிரமித்துக்கொண்டு திக்குவாயிலிருந்து விடுபடமுடியாமல் தடுத்துவருவதை உணர்ந்தேன்.

அவள் பேசும் நேரத்திலும், வாசிக்கும் நேரத்திலும் அவளது கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு காரணியை உருவாக்க முயன்றேன்.

பேசும் பொழுது சுவாசம் சரியாக செய்யாமல் பேசியதைக் கண்டுபிடித்தேன்.

"பேசும் முன் மூச்சிக்காற்றை நன்றாக இழுத்தப்பிறகு பேச வேண்டும்"

 என்ற கட்டுப்பாட்டைக் கூறினேன்.

அவளது கவனம் முழுவதும் தன்னுடைய சுவாசத்திலும், பேச்சிலும் இருந்ததால் திக்குவாய் படிப்படியாகக்குறைந்து தற்போது நன்றாகப் பேசுகின்றாள் , வாசிக்கின்றாள்.

மொழித்திறன் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

மொழித்திறன் வளர்ச்சியடைந்தால் குழந்தையின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

எனவே குறைந்தபட்சம் ஒரு வயதிலிருந்து மூன்றுவயதுவரை தாய்மொழியில் பேசும் வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், சுதந்திரமும் வழங்கினால், மொழித்திறன் இயல்பாகவே  உச்சத்தைத் தொடும்  .

தாய் மொழியில் முழுப்புலமை பெற்ற மனிதன், பிற மொழியில் புலமை பெறுவதும் எளிமையான ஒன்றாகத்தான்  இருக்கும் என்பதே ஆன்றோர் வாக்கு.

அரு.மாரிகணேசு,

ஆசிரியர்,

தென்திருப்பேரை.

9943433906

arumariganeshu@gmail.com

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53