குழந்தை உலகம் -69


*வலியும், வருத்தமும்!*

குழந்தைகளை  பயமுறுத்தி வளர்க்க வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர். இதற்காகத்தான் அவர்களை அடித்து வளர்க்கின்றோம் என்றும் கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கு பயம் இருக்க வேண்டும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் அந்தப்பயம் என்பது திருவள்ளுவர் கூறுவது போன்ற பயமாகத்தான் இருக்க வேண்டும்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

என்பது போல் களவு, கொலை , கொள்ளை, பொய் கூறுதல் , பிறரை ஏமாற்றுதல்,  பிறரை துன்புறுத்துதல்  போன்ற அஞ்ச வேண்டிய செயல்களைச் செய்வதற்குத்தான் பயப்பட வேண்டும்.

அது சரி ,  படித்த பெரியவர்களுக்கே இந்த பக்குவம் இல்லாத நிலையில், இதை எப்படி  குழந்தைகளிடம் புரிய வைக்க முடியும்?.

அவர்களுக்கு பயத்தை காட்ட வேண்டியது நமது பொறுப்புதானே, அதற்காக நாம் குழந்தையை  அடித்து  வளர்க்க வேண்டும் தானே!

 என வாதிடுபவர்கள் அதிகம் உள்ளனர்.

குழந்தைக்கு வலிக்கும் அளவில் அடிக்க வேண்டும் என்கிறார்கள்.

தொடர்ந்து இதே போன்று அடித்து வளர்த்தால் அவர்களது உடலும் மனமும் மரத்துப்போகும்.

இது எதிர்காலத்தில் அவர்களிடம் பயமில்லாத  மனநிலையை ஏற்படுத்திவிடும். இதுதான மிகவும் ஆபத்தான அணுகுமுறை  என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஆனாலும்  குழுந்தைகளுக்கு அச்சம் என்ற ஒரு உணர்வை அறிமுகம் செய்யத்தான் வேண்டும்.

இதற்காக  நுணுக்கமான ஒரு    அணுகுமுறை உண்டு.

இந்த அணுகுமுறையில் அடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. கடும் சொற்களைப் பேச வேண்டிய அவசியமும் ஏற்படாது.

யார் நம்மை வெறுத்தால் அல்லது வருத்தப்பட்டால் நமக்கு வலிக்கும்?

நமக்கு நெருக்கமான , நாம் விரும்பக்கூடியவர்கள் நம்மை வெறுத்தாலோ அல்லது நம்மீது வருத்தம் கொண்டாலோ நமக்கு அதிகமாக வலிக்கும்.

இந்த அணுகுமுறையை நம் குழந்தைகளிடம் செயல்படுத்தி அவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்த முடியும்.

முதலில் நம்மை நம் பிள்ளைகள் விரும்பும் படி நடந்து கொள்ள வேண்டும்.

அதன்பின் நாம் அவர்களுக்கு நெருக்கமானவர்களாக  மாறவேண்டும். எப்பொழுதும்  அவர்களுக்கு ஆதரவானவர்களாக  அவர்கள் உணரும்படி நடந்து கொள்ள வேண்டும்.  

அதன்பிறகு,

எப்பொழுதாவது அவர்களைச் செல்லமாக கடிந்து கொள்ளலாம்.

அல்லது அவர்களது செயல்கள் நமக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக  அவர்களிடம் காட்டிக்கொள்ளலாம்.

'நமக்கு விருப்பமான நம் தந்தை , அல்லது தாய், அல்லது ஆசிரியர் வருந்தும் வகையில் நாம் நடந்து கொள்ளக்கூடாது"' என்ற எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.

நம் தாய், தந்தை அல்லது ஆசிரியர் வருத்தப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சத்துடன் சில தவறான செயல்களை செய்யத் தயங்குவார்கள்.

இந்த அச்சம் தான் அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றும்.

இதில் மிகமிகக் கவனம் கொள்ள வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால்  அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை ஆரம்பத்தில் நாம் நிச்சயம் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

 எல்லையை மீறிய  தவறுகளில் குழந்தைகள் ஈடுபடும்போதுதான்  நாம் இதுபோன்ற நமது வருத்தங்களை அவர்களிடம் காட்ட வேண்டும்.

அடிக்கடி அவர்களை கடிந்து கொண்டால்  அவர்கள் *விரும்பும் நபர்* என்ற தகுதியை நாம் இழந்துவிடுவோம். அதன்பிறகு  

இந்த மென்மையான அணுகுமுறை   நிச்சயம் தோற்றுப்போய்விடும்.

மேலும்  இதைப்பயன்படுத்தி  நம்மை   ஏமாற்றப்பழகிவிடுவார்கள்.

எனவே,

குழந்தைகளின் விருப்பத்திற்குரியவர்களாக மாறுவோம்!

குழந்தைகளை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றுவோம்!

அரு.மாரிகணேசு,

ஆசிரியர்,

தென்திருப்பேரை.

9943422906

arumariganeshu@gmail.com 




Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53