குழந்தை உலகம்-68
*நமக்கான சமூக அந்தஸ்து*
ஒருவரின் சமூக அந்தஸ்து என்பது அவர் பிறரைச் சார்ந்து வாழும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த உலகில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று என்றாலும், நாம் யாரைச் சார்ந்திருக்கிறோம் அல்லது எதைச் சார்ந்திருக்கிறோம்? என்பதைப் பொறுத்தே நமக்கான சமூக அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது.
நம்மைச் சார்ந்து யார் வேண்டுமென்றாலும் வாழலாம், அது நமக்கான சமூக அந்தஸ்தை உயர்த்தவே உதவும். ஆனால் நாம் யாரைச் சார்ந்து அல்லது எதைச் சார்ந்து வாழ்கிறோம் என்பதில்தான் நமக்கான சமூக அந்தஸ்து அடங்கியுள்ளது.
நமக்கான சமூக அந்தஸ்து என்றால் என்ன?
நமக்கான சமூக அந்தஸ்து என்பது நம் மீது மற்றவர் வைத்திருக்கும் பார்வை, கருத்து, எண்ணம், மதிப்பு , உணர்வு, மரியாதை என அனைத்தும் அடங்கிய ஒரு தொகுப்பு ஆகும்.
நம் தொடர்பான ஒவ்வொரு செயல்பாடுகளிலும், பிறர் இதை வெளிப்படுத்துவார்கள். இதனால்தான் ஒருவரது நடத்தை நபர்களைப் பொறுத்து வேறுபடுகிறது.
நமக்கான சமூக அந்தஸ்து பற்றி யாரும் பேசமாட்டார்கள், இதை ஒரு மொழியின் மூலமாக யாருக்கும் புரிய வைக்கவும் இயலாது. இது உள்ளுணர்வுடன் தொடர்புடைய ஒரு மறை பொருள்.
ஆனாலும் இத்தகைய நமக்கான சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அனைவருஅ பாடுபடுகிறோம். இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் இத்தகைய நமக்கான சமூக அந்தஸ்து எதன் மூலம் உயரும்? என்றற உண்மை பலருக்கும் தெரியாததால்தான் குழப்பத்துடன் பயணிக்கிறார்கள்.
அத்தகைய உண்மைகளுள் ஒன்றுதான் "பிறரைச் சார்ந்து வாழ்தல் " என்ற பண்பு. யாரைச்சார்ந்து அல்லது எதைச்சார்ந்து நம் வாழ்க்கை அமைய வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த முக்கிய முடிவுதான் நமக்கான சமூக அந்தஸ்தை தீர்மானிக்கிறது.
இதை எளிமையாக கூறுவதென்றால் " உன் நண்பனைக்காட்டு, உன்னைப்பற்றி நான் கூறுகின்றேன்" என்ற பழமொழியை நாம் கூறலாம்.
எனவே நாம் யாரைச் சார்ந்து அல்லது எதைச்சார்ந்து வாழ வேண்டும் என்பதை நாம் தான் ஆராய்ந்து முடிவெடுக்க பழக வேண்டும்.
என் வகுப்பறையில் குழந்தைகளிடம் " உன்னிடம் யார் வேண்டுமென்றாலும் சேர்ந்து கொள்ளலாம், ஆனால் நீ யாரிடம் சேர வேண்டும் என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்" என்று அடிக்கடிக் கூறுவேன்
இந்த இரண்டிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
"சமூகத்திற்கு ஒவ்வாத நடத்தை கொண்ட ஒரு மாணவனிடம் , நாம் சேர்ந்தால் , நாம் அவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை இருக்கும். அதே நேரம் நம்மிடம் அந்த ஒவ்வாத நடத்தை கொண்ட மாணவன் சேர்ந்தால் நம் சொல்லுக்கு மதிப்பளித்து பழகுவான்".
எனவே நம் குழந்தைகளுக்கு "அவர்கள் யாரிடம் சேர வேண்டும்" என்பதை முடிவெடுக்க சிறுவயதிலிருந்தே பயிற்சியளிக்க வேண்டும்.
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை.
9943422906
Comments
Post a Comment