குழந்தை உலகம்-67
*சிந்திக்கும் மொழி*
எந்த மொழியில் நாம் சிந்திக்கின்றோமோ , அந்த மொழிதான் நமது மொழி என்பதாக அமையும். நமது மொழியில் கற்றால்தான் கற்றல் சிறப்பாக அமையும் .
நமது மொழி என்பது நமது தாய் மொழியாகவும் இருக்கலாம், நாம் புழங்கும் மொழியாகவும் இருக்கலாம்.
நம் நாட்டின் வாழ்க்கைச் சூழலின்படிப் பார்த்தால் நமது மொழியும் நமது தாய்மொழியும் ஒன்றாகத்தான் இருக்கிறது.
எனவே நமது மொழியான தாய்மொழியில் கல்வி கற்றால் நமது சிந்தனை மேம்படும்.
இவை தவிர்த்து பிற மொழிகளில் சிந்திக்கவும் நம்மால் இயலும். ஆனால் அவை தகவல் பரிமாற்றத்திற்குத்தான் பயன்படுமே ஒழிய மேம்பட்டு சிந்திப்பதற்கு நமக்கு உதவாது.
நமது மூளையால்
உருவங்கள், குறியீடுகள் ,மொழி, அனுபவங்கள், போன்ற பல கருவிகளின் உதவியுடன்தான் சிந்திக்கமுடியும் .
தனித்து எதையும் சிந்திக்காது.
பிற மொழியில் கற்கும் பலரது மூளையில் ,
அவரவர் மொழியில் சிந்தித்து, பிற மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தான் கற்றல் நிகழ்கிறது.
அவரவர் மொழியில்தான் படைப்பாற்றல் வெளிப்படும்.
மிகச்சிறந்த படைப்புகள் அவரவர் மொழியில்தான் உற்பத்தி ஆகும். அதை சிறப்பாக மொழிபெயர்த்து வெளிப்படுத்துபவர்கள் பிறமொழிப் புலமையாளர்களாக அறியப்படுகிறார்கள்.
குழந்தைகளுக்கு பிற மொழியில் கல்வி வழங்கப்பட்டால், அந்தக் குழந்தைகள் சிந்திப்பது ஒரு மொழியிலும் , மொழிபெயர்த்து வெளிப்படுத்துவது பிறமொழியிலும்
என இரண்டு செயல்களைச் செய்துதான் கல்வி கற்கின்றனர்.
இதற்கு பதிலாக,
கல்வியை அவரவர் மொழியில் கற்பித்துவிட்டு, தொடர்புக்கான பிற மொழிகளை தனியாக கற்றுக் கொடுத்தலே மிகச்சிறந்த வழியாக இருக்கும்.
மேலும் அவரவர் சிந்திக்கும் மொழியும் , தாய்மொழியும் வெவ்வேறாக இருந்தால் பல தலைமுறைக்குப்பின் ,
சிந்திக்கும் மொழியே தாய்மொழியாக மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.
நமது தாய்மொழி என்பது நமது அடையாளம் என்பதால் அதே மொழியில் கல்வி வழங்குவது நம் பண்பாட்டைப் போற்றி பாதுகாக்க பெரிதும் துணைசெய்யும்.
நம் அடையாளங்களை இழந்துவிட்டு , இந்தப்பிறவியில் நாம் அடையப்போவது அதை விட உயர்ந்ததாக நிச்சயம் இருக்கப்போவது இல்லை.
பிறமொழியில் சிந்திப்பதும், பிற மொழிப் பண்பாட்டை ஏற்பதும் ஒன்றுதான்.
நமது பண்பாட்டைப் போற்றிப் பாதுகாப்பதும், அதைச் சிறந்ததாக உயர்த்துவதும், அதை பரப்புவதும் நமது கடமையாக இருந்தால்,
நமது தன்னம்பிக்கை உயரும்.
அதன் மூலம் நமது ஆளுமையும் மேம்படும்.
நமது சிந்திக்கும் மொழியும், நமது தாய்மொழியும் ஒன்றாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை.
9943422906
Comments
Post a Comment