குழந்தை உலகம்-66


*வாழ்க்கைக்கானத் திறன்கள்*

நம் குழந்தைகளிடம் எப்படிப்பட்ட திறமைகள் வளர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்?

ஒரு காலத்தில்   உழவுத்தொழில் உயர்ந்த மதிப்புமிகுந்த தொழிலாக விளங்கியது. எனவே அதற்குத் தேவையான உடல் வலிமையை தங்கள் குழந்தைகளிடம் எதிர்பார்த்தனர் அந்த காலத்து பெற்றோர்.

அதனால் தான்  ஜல்லிக்கட்டுக்காளையை அடக்குவதும், இளவட்டக்கல்லை தூக்குவதும் திருமணம் முடிப்பதற்கான தகுதியாக வைத்திருந்தனர்.

ஆங்கிலேயர் காலத்திற்குப்பிறகு மருத்துவரும், பொறியாளரும், வழக்குரைஞரும் மிகவும் மதிப்பிற்குறியதாக தொழிலாக  மாறியது.

அதனால் அதற்கு ஏற்றத் திறமைகளை நமது குழந்தைகளிடம் நாம் எதிர்பார்த்தோம்.

அதன்பின்னர் மென்பொருள் பொறியாளருக்கு மதிப்பு உயர்ந்தது.

எனவே அதை நோக்கியே நமது பிள்ளைகளை விரட்டினோம்.

தற்போது அரசு மற்றும் தனியார் துறையின் உயர்பதவியை மதிப்பிற்குரியதாகக் கருதி, அதற்கேற்றத் திறன்களை  நமது பிள்ளைகளிடம் வளர்க்கப் பாடுபடுகிறோம்.

நமது எண்ணங்களில் ஏற்பட்ட, 

படிப்படியான இந்தப் பரிணாம மாற்றங்களைக் கூர்ந்து கவனித்தோமானால் ஒரு உண்மையை நாம் உணர முடியும்.

நம் முன்னோர்கள் தங்கள் குழந்தைகளை தற்சார்பு கொண்டவர்களாக மாற்றவே விரும்பினர்.

தங்கள் பிள்ளைகளை பிறர் சார்ந்து வாழும் வகையில் திறமைகளை வளர்க்க விரும்பினர். இந்த நோக்கம் படிப்படியாகத் தேய்ந்து , தற்போது நம் பிள்ளைகள் பிறரைச் சார்ந்து வாழ்வதற்குத் தேவையான திளன்களை அவர்களிடம் வளர்க்க முயற்சி செய்கிறோம்.

ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்காகக் கையேந்தி நிற்கும் நிலைக்கு நமது சிந்தனை தள்ளப்பட்டிருப்பதை நாம் உணர வேண்டும்.

அது மட்டுமல்லாமல்  "நம் பிள்ளைகள் கல்வி கற்பதே எதிர்காலத்தில் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிப்பதற்காகத்தான்" என்ற மிகக்குறுகிய வலையில்  நமது சிந்தனை மாட்டிக்கொண்டுள்ளதையும் நாம் உணர வேண்டும்.

நம் முன்னோர்கள் வேலைக்கும், பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நமக்கு மிகச்சிறந்த வழிகாட்டிகளும் , மேதைகளும், படைப்பாளிகளும், விஞ்ஞானிகளும், சித்தர்களும், சிந்தனையாளர்களும் , தலைவர்களும், அடையாளங்களும், ஆளுமைகளும், தொழிலதிபர்களும் கிடைத்திருக்க மாட்டார்கள்.

"யாரிடமோ நம் குழந்தை வேலைக்குச் சேர்ந்தால் போதுமானது" என்ற எண்ணம் நமக்கு இருப்பதால்தான் நமது குழந்தைகள் தற்சார்பு எண்ணமோ, தன் ஆளுமையை வளர்க்கும் எண்ணமோ இல்லாமல் வளர்கிறார்கள்.

இது நம் நாட்டின் எதிர்காலத்திற்கே ஆபத்தாக அமையும்.

பிறரிடம் வேலைக்குச் சேர்ந்து பணம் சம்பாதிப்பது மட்டுமே மனிதகுல படைப்பின் நோக்கமல்ல என்பதை நாம் உணரவேண்டும். நம் பிள்ளைகள் மிகச்சிறந்த மனித வாழ்க்கையை, வாழத் தேவையான திறன்கள், அவர்களிடம் வளர நாம்       வாய்ப்பு  வழங்க வேண்டும்.

அரு.மாரிகணேசு,

ஆசிரியர்,

தென்திருப்பேரை.

arumariganeshu@gmail.com

9943422906

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53