குழந்தை உலகம் -65


அஞ்சுவது அஞ்சல்

ஒழுக்கத்தைக் கற்றுத்தருவதே கல்வியின் நோக்கம் என்கிறோம். ஒழுக்கம் என்றால் என்ன? அந்த ஒழுக்கத்தை வளர்ப்பது எப்படி? 

பிறரை அடித்தல் , துன்புறுத்துதல் , பிறர் பொருளைத் திருடுதல்  போன்றச்   செயல்களைச் செய்யும் குழந்தையை ஒழுக்கமில்லாதக்  குழந்தை என்கிறோம். ஒழுக்கமற்றச் செயல்கள் என்று நாம் பட்டியலிட்டால் , அவை ஆயிரக்கணக்கில் நீளும்.   ஒருவர் பொய் கூறினால் அது தவறு என்கிறோம். "பொய்மையிடத்து வாய்மை" என்று திருவள்ளுவர் ஒரு இடத்தில்  பொய்யை ஆதரிக்கிறார். இது போன்ற இடங்களில்  எது ஒழுக்கம் என்பதை எப்படி வரையறுப்பது?  

வெறும் செயல்களை மட்டும் குழந்தைகளிடம் அடையாளப்படுத்திவிட்டு, இவற்றைச் செய்தால் ஒழுக்கம்,   அவற்றைச் செய்தால் ஒழுக்கமில்லை என்று கற்றுத்தருவதால் பெரிய பலன் எதுவும் ஏற்படப்போவதில்லை.

   

ஒழுக்கம் என்பது வெறும் செயல்களை மட்டும் சார்ந்தது கிடையாது. ஒருவரின் எண்ணங்களின் வெளிப்பாடுதான் செயல்கள் என்பதால் , ஒழுக்கம் என்பது எண்ணங்களைச் சார்ந்துதான் அமைகிறது. எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் செயல்களும் ஒழுக்கமானதாக வெளிப்படும். எண்ணங்களில் தூய்மை இல்லையென்றால் அவர்களின் செயல்களும் ஒழுக்கமற்றதாகத்தான் வெளிவரும்.    நம் குழந்தைகளிடம் நல்ல எண்ணங்கள் முளைக்க வேண்டுமென்றால் , முதலில் நாம் , அவர்களிடம்  நல்ல எண்ணங்களை விதைக்க  வேண்டும்.  நம்மால் இது முடியவில்லை என்றால்  ,நல்ல எண்ணங்கொண்ட மனிதர்களை  நாம் குழந்தையிடம்  அறிமுகப்படுத்தலாம்.

  

எண்ணங்கள்தான்,    விதைகள் என்றால், அதை விதைக்க வேண்டிய நிலம் , அந்தக் குழந்தையின்  உள்ளுணர்வு ஆகும்.

 உள்ளுணர்வுதான்   ஒவ்வொரு மனிதனையும் இயக்கும் சக்தியாக விளங்குகின்றது. நாம் விதைக்கும் நல்ல எண்ணங்கள் அவர்களின் உள்ளுணர்வுடன் கலக்கும் போது  அந்தக் குழந்தையிடமிருந்து நல்ல எண்ணங்கள் முளைக்கத் தொடங்கும். அந்தக் குழந்தையின் நடத்தையிலும் அது நல்ல மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கும்.

அந்தக் குழந்தை

தெரிந்தோ , தெரியாமலோ ஏதேனும் ஒரு தவறு செய்ய நேரிட்டால் அவர்களது மனதில் ஒரு குற்ற உணர்வு ஏற்படும் . இந்தக் குற்ற உணர்வுதான் ஒழுக்கத்தின் , அடிப்படையான அறிகுறி ஆகும். இந்த அறிகுறி தென்பட்டால் அந்தக் குழந்தையிடம் ஒழுக்கம் வளரத் தொடங்கிவிட்டது என்பதை அறிந்து நாம் மகிழ்ச்சி அடையலாம்.

   

இது போன்றக் குற்ற உணர்வு ஒரு குழந்தையிடம் உருவாகிவிட்டால் அதற்கு நாம் மிகுந்த மதிப்பளிக்க வேண்டும்.   இதைத்தான் திருவள்ளுவர் 

"அஞ்சுவது அஞ்சாமைப் பேதைமை அஞ்சுவது 

அஞ்சல் அறிவார் தொழில்" 

என்று குறிப்பிடுகிறார். 

குழந்தைகளின் உள்ளுணர்வுடன் நல்ல எண்ணங்கள் கலந்தபின்னர்தான் , ஒழுக்கம் என்ற பண்பு வளரத் தொடங்கும்.  இதைக் குற்ற உணர்வு என்ற அறிகுறியின் மூலம் நாம்  உணர்ந்து கொள்ள முடியும்.

இத்தகைய குழந்தையிடம்  அஞ்ச வேண்டிய செயல்கள் எவை?, அஞ்சத் தேவையில்லாத செயல்கள் எவை ? என்பதை அவரவர் உள்ளுணர்வுதான்   முடிவு செய்ய வேண்டும் என்பதாகத்தான் நாம்   வழிகாட்ட வேண்டும்.

ஒழுக்கச்சீலர்களை  உருவாக்குவோம்! 

மனிதகுல ஒற்றுமையை உறுதி செய்வோம்!

அரு.மாரிகணேசு, 

ஆசிரியர்,

தென்திருப்பேரை,

9943422906

arumariganeshu@gmail.com

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53