குழந்தை உலகம்-64
கேட்டல் நல்லது
வகுப்பறைகளில் ஆசிரியர்கள் உடல் , பொருள், ஆவி அனைத்தையும் பயன்படுத்திக் கற்பிக்கின்றனர். அவர்களது கற்பித்தல் எத்தனை சிறந்த ஆற்றல் மிக்கதாக இருந்தாலும், மாணவர்களின் சிறு முயற்சியாவது இருந்தால் மட்டுமே அங்கு நாம் எதிர்பார்க்கும் கற்றல் நிகழும். இல்லையென்றால் ஆசிரியர்களின் அத்தனை ஆற்றல்களும் வீணாகிவிடுகிறது. மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர்களின் கற்பித்தலை கவனிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அந்த நிலையை எட்டுவது மிகவும் அசாத்தியமானதாக இருக்கிறது.
குழந்தைகளை இதற்குப் பொறுப்பாளியாக்குவதும் நியாயமில்லை. அவர்களுக்கு அதற்கான அடிப்படைப் பயிற்சியை நாம் வழங்கவில்லை என்பதுதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது எப்படிப்பட்ட பயிற்சியாக இருக்க வேண்டும்?
மொழித்திறன்களான கேட்டல், பேசுதல் , படித்தல் , எழுதுதல் போன்ற அடிப்படைத்திறன்களை வளர்க்க வேண்டும் என நாம் பாடுபடுகிறோம். ஆனால் படித்தல் , எழுதுதல் என்ற இரண்டு திறன்களுக்குத்தான் அதிக கவனம் செலுத்துகிறோம். கேட்டல் திறனுக்கு நாம் முக்கியத்துவம் வழங்குவதில்லை.
கேட்டல் திறன் அனைத்துக் கற்றலுக்கும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அந்தத் திறன் குழந்தைகளிடம் வளர தொடக்கத்திலிருந்தே நாம் முயற்சி எடுக்க வேண்டும்.
ஆரம்பத்தில் கதைகளைக்கூறி குழந்தைகளின் கேட்டல் திறனைத் தூண்டலாம். அதன் பிறகு செய்திகளைக் கூறி கேட்டலை மேம்படுத்தலாம். புத்தகங்களை நாம் வாசித்துக் காட்டி கேட்டலை மேம்படுத்தலாம்.
நாம் பேசும் பேச்சுக்களைக் கேட்கக் கூறி கேட்டலை மேம்படுத்தலாம். வானொலி , தொலைக்காட்சி, கைபேசி போன்ற தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்திக் கேட்டலை மேம்படுத்தலாம்.
இவை அனைத்தையும் நாம் செய்தாலும் குழந்தைகள் கேட்டல் வேலையைச் சரியாகச் செய்கின்றனரா? என்பதை நாம் அவ்வப்போது சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இடையிடையே கேள்விகள் கேட்பதன் மூலம் இதை நாம்செய்ய முடியும். கேட்டலை மிகச் சிறப்பாகச் செய்த குழந்தைக்குப் பாராட்டும் , பரிசும் வழங்கலாம்.
குழந்தைகள்
கேட்டல் வேலையைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் மனநிலை இயல்பாக இருத்தல் மிகவும் அவசியம்.
கேட்டலின் முக்கியத்துவதை குழந்தைகளிடம் அவ்வப்போது நினைவுபடுத்த வேண்டும்.
இந்தக் கல்வியாண்டில் நான் எனது வகுப்பறையில் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கிச் செயல்படுத்தினேன். "கவனி ! கவனி!" என்று கூறுவதற்குப் பதிலாக "கேட்டல் வேலை செய்" என்று மாற்றிக் கூறினேன். படித்தல் , எழுதுதல் செயலை செய்யமுடியவில்லை என்றால் கூட பரவாயில்லை , கேட்டல் வேலையை மட்டும் சரியாகச் செய்தால் மிகப்பெரிய அறிவுச் சொத்தை நாம் சம்பாதிக்க முடியும் என்றும் அடிக்கடிக் கூறினேன்.
இத்தனை ஆண்டுகள் வகுப்பறையில் நான் பார்க்காத மிகப்பெரிய மாற்றங்களை இந்த ஆண்டு நான் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
" கேட்டல் நல்லது!
கேட்டல் நல்லது !"
என்ற என்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்துக் கேட்டல் செயலைச் செய்த அனைத்துக் குழந்தைகளும் கல்வியில் மிகச் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை."
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை.
9943422906
Comments
Post a Comment