குழந்தை உலகம்-63
இயல்பான மனநிலை
குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற மனநிலை எதுவாக இருக்கும்?
உலகில் நடைபெறும் அனைத்து இயக்கங்களும் மக்களின் மனநிலையைச் சார்ந்துதான் இயங்குகின்றன. மகிழ்ச்சி, வெறுப்பு, கோபம், இரக்கம், சலிப்பு, வருத்தம், பூரிப்பு, இறுக்கம் போன்ற பல மனநிலைகள் தான் மக்களை இயக்கமாக மாற்றுகிறது.
இது போன்ற ஒவ்வொரு மனநிலைக்கும் அதற்கான நாளமில்லா சுரப்பிகள் சுரந்து மனிதனை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு அந்த மனநிலையிலேயே தக்க வைத்துக் கொள்கின்றன. அத்தகைய மனநிலை மாறுவது என்பது உடனடியாக நடப்பது கடினம்.
மக்களின் மனநிலையை சரியாக கண்டறியத் தெரிந்தவர்களால்தான் மக்கள் பணியைச் சிறப்புற ஆற்ற முடியும்.
இவற்றில் எந்த மனநிலை குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற மனநிலையாக இருக்கும்?
பொதுவாக குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான் சிறப்பாக கல்வி கற்க முடியும் என பலரும் நம்புகின்றனர். என் அனுபவத்தில் நான் உணர்ந்தவற்றை இங்கே பகிர்கின்றேன்.
குழந்தைகளை மகிழ்ச்சி மனநிலைக்குக் கொண்டு வந்தபின் அவர்களது உடலில் அதற்கான நினநீர் சுரப்பி சுரந்துவிடுகிறது. அந்தச் சுரப்பி உடல் முழுவதும் பரவி நம்மை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுகின்றன. அந்தச் சுரப்பியின் ஆற்றல் குறைய நீண்ட நேரம் ஆகலாம். அந்த நேரத்தில் மகிழ்ச்சியான விசயங்களைத் தவிர வேறு வகை உணர்வை ஏற்படுத்தும் விசயங்களை நமது மனம் ஏற்பதில்லை. இந்தச் சூழலில் குழந்தை மிகவும் நுணக்கமானக் கற்றலை மிகக் கவனத்துடன் கற்க முடிவதில்லை.
கோபம் , வெறுப்பு போன்ற எதிர்மறையான மனநிலையில் எந்தவிதமான கற்றலும் நடப்பது கிடையாது.
குழந்தை மகிழ்ச்சியான சூழலில் இருக்கும் போது குழந்தையின் கற்றல் அடைவு எதிர்ப்பார்த்த அளவிற்கு இருப்பதில்லை. இதனால் நேரமும், மனித ஆற்றலும் விரயமாகின்றது.
மற்ற உணர்வுகளைவிட மகிழ்ச்சி உணர்வு சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதைவிடவும் சிறப்பான சூழல் எதுவாக இருக்கும் என்ற ஆய்வில் ஈடுபட்டேன்.
எந்தவித நேர்மறையான அல்லது எதிர்மறையான உணர்வுகளும் இல்லாமல் குழந்தை நடுநிலை மனநிலையில் இருக்கும் போது நாம் எதிர்பார்த்ததை விட மிக அதிக கற்றல் அடைவை குழந்தைகள் பெற்றதை நான் பார்த்தேன்.
இதை நான் குழந்தையின் இயல்பான மனநிலை என்று குறிப்பிடுகின்றேன். குழந்தைகள் இயல்பான மனநிலையில் இருக்கும் போதுதான் மிகச்சிறந்த கற்றல் நடைபெறுகிறது. இந்த மனநிலைதான் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு மிக ஏற்ற மனநிலையாக இருக்கிறது.
எனவே குழந்தையின் மனநிலை இயல்பாக இருக்குமாறு அவர்களின் சூழலை நாம் அமைத்துக் கொடுத்தால் , குழந்தை வாழ்வில் மிக உச்சமான வெற்றி பெறுவது திண்ணம்.
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
9943432906
arumariganeshu@gmail.com
Comments
Post a Comment