குழந்தை உலகம் -62

மனங்களை வெல்வோம்!

நம் குழந்தை எதிர்காலத்தில் எப்படிப்பட்ட உலகில் வாழப் போகிறாரோ ? என்ற அச்சம் அனைத்து பெற்றோருக்கும் இருக்கத்தான் செய்யும். இந்த உலகில் இவன் எப்படி பிழைக்கப்போகிறான் ? என்ற அச்சத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் நம் பிள்ளைகளை   நாம் வளர்க்கிறோம். எதிர்கால உலகம் எப்படி இருக்கும்? எதிர்கால மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் ? என்பது போன்ற அவநம்பிக்கை நம்மில் பலருக்கும் இருக்கிறது.

இதன் காரணமாக நம் குழந்தைகளுக்குப் பலதரப்பட்ட திறமைகளை வளர்க்கப் பாடுபடுகிறோம். ஆனால்  இவை அனைத்தும் பிழைப்புக்கான பயிற்சிகளாகத்தான் இருக்கிறது. வாழ்க்கையை    வெற்றிகரமாக வாழ்வதற்கான பயிற்சியை நாம்  கற்றுக் கொடுக்கத் தவறுகிறோம். நிகழ்காலத்தில்

சகமனிதர்களுடன் வாழ்கிறோம் .

எதிர்காலத்திலும் மனிதர்களுடன்தான் வாழ இருக்கிறோம்.

சக மனிதர்களுடன் வாழும் இந்த வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றும் பயிற்சியை நாம் வழங்குவதில்லை .

நம் கல்வி முறையும் இதை நோக்கியதாக இருக்கவில்லை.  இத்தகைய வெற்றிகரமான   மனித  வாழ்க்கைக்கான    பயிற்சி,  ஏற்கனவே நமக்கு வழங்கப்பட்டிருந்தால்,  நாம் எதிர்கொள்ளும் பல சிக்கல்கள் நமக்கு  இன்று இல்லாமல் போயிருக்கும் .

கணவன்_ மனைவி பிரச்சனை, மாமியார்_ மருமகள் பிரச்சனை , அண்ணன்_ தம்பி பிரச்சனை, பெற்றோர்_ பிள்ளைகள் பிரச்சனை, முதலாளி_ தொழிலாளி பிரச்சனை , சாதி பிரச்சனை , மதப்பிரச்சனை , நாடுகளுக்கிடையேயான பிரச்சனை என பலதரப்பட்ட பிரச்சனைகளை நாம் சந்தித்திருக்க மாட்டோம்.

நம் குழந்தை எதிர்காலத்தில் வெற்றிகரமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால்,

 வாழ்க்கை எனும் போட்டியில் மனித மனங்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற  இலக்கை நோக்கி நம் குழந்தைகள் பயணிக்க  நாம்   வழிகாட்ட வேண்டும்.

 அதை நோக்கியப் பாதையில் நம் குழந்தைகள் பயணிக்கத் தொடங்கிவிட்டால் பல   மனிதப்பிரச்சனைகள் படிப்படியாகக் குறைந்து விடும்.

நம் குழந்தைக்கு இத்தகைய நோக்கத்தை மனிதில் நிறுத்திவிட்டால் கூடப் போதுமானதுதான் , எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் பிரச்சனைகளில் பாதி குறைந்துவிடும்.

 எதிர்கால உலகம் பற்றிய அச்சமும் நமக்கு இருக்காது.

மனித மனங்களை  நம் குழந்தை வெல்லத் தொடங்கிவிட்டால்

நம் குழந்தையைப் பலரும் ஏற்றுக்கொள்வார்கள்.

ஒரு மனிதனை நாம் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்துவிட்டால் அவரது கருத்துக்களையும் ஏற்கும் மனநிலை உருவாகிவிடும். 

நம் குழந்தையை எதிர்கால உலகம் ஏற்றுக்கொள்ளும்.

மனித மனங்களை வெல்பவர்களே மனிதர்களுடன் வெற்றிகரமாக வாழ முடியும்.

இவர்களால்தான் மனிதர்களை ஆளவும் முடியும்.

மனித மனங்களை வெல்வது எப்படி?

ஒவ்வொரு மனிதனும் இறைவனின் அம்சம் என்ற எண்ணத்துடன் அவர்களிடம் அன்பு செலுத்தினால் போதும்,

அனைவரது மனங்களையும் எளிதாக   வென்றுவிடலாம்.

நம் குழந்தையும் பிற மனிதர்களிடம்  அன்பு செலுத்துவதற்கு நாம் வழிகாட்ட வேண்டும்.

அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
9943422906
arumariganeshu@gmail.com

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53