குழந்தை உலகம்-60
திருவிழாக்கள்
மனித இனத்தின் வாழ்நாள் குறிக்கோள் எதுவாக இருக்கும்?
பணம் சம்பாதிப்பது,
பதவியைப் பெறுவது,
மரியாதையை உயர்த்திக்கொள்வது,
அறிவைச் சேகரிப்பது, என்பன போன்ற பல குறிக்கோள்களை நம்மில் பலர் வாழ்நாள் இலக்காகக் குறிப்பிடுகிறோம்.
நம் வாழ்வின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே நாம் இயங்குகிறோம்.
அத்தகைய அன்றாடத் தேவைகள் தான் பணம், பதவி, மரியாதை , அறிவு போன்றனவாகும்.
சரி , இந்தத் தேவைகள் பூர்த்தியடைந்தபின்னர் நம் வாழ்க்கை முடிந்துவிடுகிறதா?
இதைத் தாண்டிய குறிக்கோள் ஏதாவது இருக்கிறதா?
இருக்கிறது . அதுதான் மன அமைதி.
மேற்கண்ட தேவைகள் பூர்த்தியடைந்தபின்னரும் மனித இனம் இயங்குவது மன அமைதியான வாழ்க்கையை நோக்கியே தான் இருக்கும்.
நம்முடைய மனதிற்குள்ளும் , வெளியிலும் நடக்கும் மாற்றங்களால் நம் மனதிற்குள் பாதிப்புகள் , காயங்கள், இறுக்கங்கள், வலிகள் , வேதனைகள் ஏற்படத்தான் செய்கின்றன.
அதை அவ்வப்போது சரி செய்து சீராக வைத்துக்கொள்வதுதான் நம்முடைய வாழ்நாள் குறிக்கோளாக இருக்கிறது.
இந்த இலக்கை அடைவதற்காக நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புதான் திருவிழாக்கள்.
ஒரு வாகனத்திற்கு அவ்வப்போது சர்வீஸ் தேவைப்படுவதுபோல் , மனித மனதிற்கும் சர்வீஸ் தேவைப்படுகிறது.
அத்தகைய சர்வீஸ்தான் திருவிழாக்கள்.
திருவிழாக்கள் கொண்டாடுவதன் மூலம் ஏற்ற, இறக்கங்களுடன் இயங்கும் மனித மனதை ஒரே சீராக இயங்கவைக்க முடியும்.
நம் குழந்தைகள் திருவிழாக்களைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பை, உரிமையை நாம் வழங்க வேண்டும்.
மனித இனத்தின் வாழ்நாள் இலக்கை அடைய இத்தகைய திருவிழாக்கள் நம் குழந்தைகளுக்கு உதவி செய்யும்.
மேலும் குழந்தைகளுக்குப் பலதரப்பட்ட அனுபவங்களையும், பயிற்சிகளையும், அறிவையும் வழங்கும் சிறந்த கருவியாக திருவிழாக்கள் இருக்கிறது. மேலும் சக மனிதர்கள் மீது பாசமும், நம் பாரம்பரிய பண்பாட்டின் மீது பற்றும் ஏற்பட திருவிழாக்கள் துணை செய்யும்.
பணம், பதவி, மரியாதை , அறிவு போன்றவற்றைத் தேடுவதற்காக, திருவிழாக்களைக் கொண்டாடாமல் தியாகம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
வாகனங்கள் எந்த அளவிற்கு இயங்குகிறதோ அதற்கு ஏற்ற எண்ணிக்கையில் தான் சர்வீஸ் தேவை. அதே போன்றுதான் நம் முன்னோர்கள் நம் மனங்களின் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் தான் திருவிழாக்களை உருவாக்கித்தந்துள்ளனர்.
எனவே பாரம்பரியமாக நாம் கொண்டாடும் திருவிழாக்களே நமக்கு போதுமானதுதான்.
அவற்றை நம் குழந்தைகள் உரிமையுடன் கொண்டாட வாய்ப்பு வழங்குங்கள். மன அமைதியான வாழ்க்கை வாழ நம் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருங்கள்.
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம்.
9943422906
arumariganeshu@gmail.com
Comments
Post a Comment