குழந்தை உலகம் -59


________________

பற்றும், பாசமும்

-------------------------

நம் ஒவ்வொரிடமும்  

தாய் மண்ணின் மீது பற்றும், தாய் நாட்டு மக்கள் மீது பாசமும்

  நிச்சயம் இருக்க வேண்டும்.

இவை இல்லையென்றால் இந்த உலகில் நம்மால் அமைதியான, மனநிறைவான  வாழ்க்கை வாழ முடியாது.

இவை நம் குழந்தைகளிடமும் வளர நாம் முயற்சி செய்ய வேண்டும். 

பாடல்கள், கதைகள் , நாடகங்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் மூலம் இவை வளர நாம் முயற்சி செய்கிறோம்.

ஆனால் நடைமுறை வாழ்க்கையிலிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கான சூழலை நாம் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை.

இவ்வளவு காலமும்  நாட்டுப்பற்றையும், மக்கள் பாசத்தையும் நமக்கு கற்றுத்தந்ததில் மிக முக்கிய பங்கு வகித்தது நாம் வாழும் ஊர்.

சிறு வயதிலிருந்தே கீழே உருண்டு  விளையாடிய மண், பல அனுபவங்களை அள்ளித் தந்த மண் என்பதால் நம் ஊரின் மீது இயற்கையாகவே பற்று ஏற்பட , நம் ஊரின் மண்    காரணமாக   அமைந்தது.

இந்த பற்றுதான்   தாய் நாட்டுப்பற்றாக வளர்கிறது.

அதேபோல்,

பல தரப்பு மக்களும் நம் ஊரில் வாழ்கின்றனர்.

அனைத்து நல்லது, கெட்டதுகளிலும் ஊர் மக்கள் அனைவரும் இணைந்தே எதிர்கொள்கிறோம்.

இதனால் இயல்பாகவே மக்களிடம் இணைப்பு வளர்கிறது.

இந்த இணைப்புதான்  நாட்டு மக்கள் மீதான பாசமாக வளர்கிறது.

எனவே நமது ஊர்தான் நம்மிடம் பற்றையும், பாசத்தையும் வளர்க்கின்ற நாற்றங்காலாக விளங்குகிறது.

தற்போது இந்த நிலை மாறிவருகிறது. நம்

குழந்தைகளை  வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்க்கிறோம்.

தூரமானப் பள்ளியில் சேர்க்கிறோம். கண்காணாத தேசத்தில் வேலை செய்ய அனுப்புகிறோம்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஊரின் மீது பற்றும், ஊர் மக்கள் மீது பாசமும் ஏற்பட வாய்ப்பே இல்லை.

இவர்களிடம் நாட்டுப்பற்று இருந்தாலும் , அது இயற்கையானதாக இருக்க வாய்ப்பு இல்லை.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் எதிர்காலத்தில் நாட்டுப்பற்று இல்லாத மக்கள் அதிகரித்துவிடுவர்.

அவர்களை வைத்து நம் நாட்டை ஆள்வதும், பாதுகாப்பதும் பெரிய சிக்கலானதாக மாறிவிடும்.

நம் குழந்தையிடம்  தாய்நாட்டுப்பற்றும், மக்கள் மீது பாசமும் இயற்கையாகவே வளர வேண்டும் என்றால் , 

நம் குழந்தைகளை

வீட்டை விட்டு வெளியே விளையாட அனுமதி வழங்குங்கள். குறைந்தபட்சம் நம் குழந்தையின் தொடக்கக்கல்வியையாவது

நம் ஊரிலேயே இருக்கக்கூடிய பொதுப் பள்ளியில் பெற வாய்ப்பு வழங்குங்கள்.

நம் ஊரின் மண் , நம் குழந்தையிடம் நாட்டுப்பற்றை வளர்க்கும்.

 நம் ஊரின் மக்கள் மற்றும்  சக நண்பர்கள்  மீதான இணைப்பு,  நம்  குழந்தையிடம் நதாய்நாட்டு மக்கள் மீது  பாசத்தை வளர்க்கும்.

அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம்.

9943422906
arumariganeshu@gmail.com

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53