குழந்தை உலகம்-57
---------------------
ஏமாற்றம்
-------------------
குழந்தை பிறந்த பிறகு முதன்முதலில் பார்க்கும் மிகப்பெரிய ஆளுமைகள் தந்தையும் , தாயும் தான்.
குறிப்பாக குழந்தை பிரமாண்டமான ஆளுமையாக பார்ப்பது பெரும்பாலும் தந்தையாகத்தான் இருக்கும்.
தன் தந்தை தான் உலகில் மிகவும் சக்திவாய்ந்த , சர்வ வல்லமை பொருந்திய ஆளுமை என்பதாக நம் குழந்தை கருதும்.
இதனால் தனக்கு துன்பம் ஏற்படும்போது தந்தையின் பக்கபலமான ஆதரவு தனக்கு கிடைக்க வேண்டும் என குழந்தை எதிர்பார்க்கிறது.
ஒரு கட்டத்தில் தன் தந்தையின் ஆதரவு இருந்தால் தான், தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நம்பத்தொடங்குகிறது.
ஒரு சராசரி மனிதனால் முடியாத, சக்திக்கு அப்பாற்பட்ட செயலையும் தன் தந்தையால் தான் செய்ய முடியும் என நம்புகிறது.
இந்த நம்பிக்கையை உடைக்கப் கூடாது என்ற எண்ணத்தில் பெரும்பாலான தந்தைகள் , தன்னால் முடியாத செயலாக இருந்தாலும் , அதை வெளிப்படுத்தாமல் , ஏதாவது பொய்யான காரணங்களைக் கூறி , தன் இயலாமையை மறைத்து வருகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்தபின் , தன் தந்தையால் ஒருசில செயல்களைச் செய்ய முடியாது என்ற உண்மையை அந்தக் குழந்தை தெரிந்து கொள்ளும் போது மிகப் பெரிய ஏமாற்றத்தை அந்தக் குழந்தை உணர்கிறது.
இத்தனை காலம், தான் ஏமாற்றப்பட்டதை, அல்லது தான் ஏமாந்து வந்ததை அவன் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
இதன் வெளிப்பாடு தந்தையிடம் கொண்ட உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எந்த அளவிற்கு உயர்வாக, பிரமாண்டமாக நினைத்து கர்வம் கொண்டானோ , அதற்கு எதிர்மாறாக , அவன் தந்தையை தரக்குறைவான இடத்தில் வைக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த ஏமாற்றத்தை தவிர்க்க வேண்டும் என்றால் , ஆரம்பத்தில் இருந்து, தன்னால் செய்ய முடியாத காரியங்களில் ,நம் இயலாமையை ஒத்துக்கொள்ள வேண்டும்.
சில குறிப்பிட்ட காரியங்களில் நம் இயலாமையை குழந்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தால் , குழந்தைக்கு பொறுப்புணர்வு அதிகரிக்கிறது.
யாரையும் சார்ந்து சிந்திக்காமல் ,தன்னார்வத்துடன் செயல்படத் தொடங்குவதால் திறமைகள் வளர்கிறது.
ஏமாற்றம் ஏற்படாதவாறு அவன் பாதுகாக்கப்படுகிறான்.
தந்தை மகன் உறவு இறுதி வரையிலும் சீராக இருக்க இந்த அணுகுமுறை பெரிதும் துணை செய்யும்.
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம்.
9943422906
arumariganeshu@gmail.com
Comments
Post a Comment