குழந்தை உலகம் -56

பக்குவப்படுத்துதல்

     ஒரு குழந்தை ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிக்கின்றது.

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும் , காய்ச்சல் வரும் , தொண்டையில்  நோய் தொற்று ஏற்படும், போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு அதை வாங்கித்தர அம்மா மறுக்கிறார். 

இதை ஏற்றுக் கொள்ளாமல் அந்தக் குழந்தை தொடர்ந்து அடம்பிடிக்கிறது.

இந்தச் சூழலில் நாம் அந்த ஐஸ்கிரீமை வாங்கித்தர வேண்டுமா?

அல்லது பிடிவாதமாக மறுக்க வேண்டுமா?

இது போன்ற பல சூழல்களில் பல பெற்றோர்கள் உறுதியான முடிவு எதுவும் எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.

சில பெற்றோர்கள் ' தங்களது சம்பாத்தியம் அனைத்தும் நம் குழந்தைக்கானது தான்', என்ற எண்ணத்தில்  தன் குழந்தை ஆசைப்பட்டுக் கேட்ட அனைத்தையும் எப்பாடு பட்டாவது வாங்கித் தந்து விடுவார்கள்.

மற்றொரு தரப்பு பெற்றோர் 'குழந்தை கேட்ட அனைத்தையும் எந்த வித மறுப்பும் இன்றி வாங்கித் தந்து விட்டால்  எந்த வித கஷ்ட, நஷ்டம் தெரியாமல் வளர்ந்து விடுவார்கள்' என்ற எண்ணத்தில் பிடிவாதமாக மறுத்து விடுவார்கள்.

இதில் எந்த அணுகுமுறை சிறந்ததாக இருக்கும் என்பது தொடர்பாக நம் வீடுகளில் பெரிய பட்டிமன்றமே நடந்து வருவது வாடிக்கையே.

என் மூன்று வயதுக் குழந்தையிடம் இதை செயல்படுத்திப் பார்த்ததை இங்கு பகிரலாம் எனக் கருதுகிறேன்.

ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடித்த என் மகனிடம் நான் அதன் பின்விளைவுகள் பற்றிய எச்சரிக்கை விடுத்தேன்.

'ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும், காய்ச்சல் வரும் , டாக்டர் ஊசி போடுவார், மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும்' போன்ற பின்விளைவுகள் பற்றிய எச்சரிக்கை விடுத்தேன்.

அதை கேட்காமல் ஐஸ்கிரீம் கேட்டு மீண்டும் அடம்பிடித்தான்.

நான் அதை வாங்கிக் கொடுத்தேன்.

அதை சாப்பிட்டு அவனுக்கு ஜலதோஷம் பிடித்தது.

சில நாட்களில் அது காய்ச்சலாக மாறியது. மருத்துவரிடம் சென்று மருந்து எடுத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. அப்பொழுது நான் 'இந்த காய்ச்சலுக்குக் காரணம் நீ சாப்பிட்ட அந்த ஐஸ்கிரீம் தான்' என்று அவனுக்கு நினைவுபடுத்தினேன்.

தற்போது ஐஸ்கிரீம்காரர் ஒலி எப்போது கேட்டாலும் என் மகன் "அப்பா ஐஸ்கிரீம் சாப்பிட்டால் காய்ச்சல் வரும்.எனக்கு வேண்டாம்" என்று கூறி விடுவான்.

இப்பொழுது நான் ஏதாவது ஒரு விசயத்தைக் குறித்து  எச்சரித்தால் அதை அவன் நம்பி ஏற்றுக்கொள்கிறான்.

இது போன்ற சிறிய சிறிய சம்பவங்கள் அவனது மனதை பக்குவப்படுத்தும். அது  பெரிய பெரிய ஆபத்துகளிலிருந்து அவனைக் காப்பாற்றும்.

தற்போது குழந்தையிடம் எதையும் பிடிவாதமாக மறுக்கும் செயல் பெற்றோர்களிடம் அதிகரித்திருக்கிறது. அதனால் அந்த நேரத்தில் குழந்தைக்கு நன்மை விளைவிக்கலாம். ஆனால் நம் கண்ணுக்கு பின்னால் அதை நிச்சயம் செய்து பார்ப்பான்.

இந்த பழக்கம் அவனுக்கு பெரிய பெரிய ஆபத்துகளில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.

எனவே நம் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் எதையும் பிடிவாதமாக மறுக்காதீர்கள்.

அவர்களுக்கு அது தொடர்பாக எச்சரிக்கை கொடுத்து , வழிவிடுங்கள்.

இது அவர்களது மனதை பக்குவப்படுத்தும்.

அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம்.
9943422906
arumariganeshu@gmail.com




Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53