குழந்தை உலகம்-55
உருவமும்_பெயரும்
பெரும்பாலான குழந்தைகள் பிறரை அடையாளம் காணும் திறனுடையவர்களாகத்தான் இருக்கின்றனர். தன் தாய், தந்தை , உறவினர்கள் , நண்பர்கள் என தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையுமே அடையாளம் காணும் அறிவு குழந்தையிடம் இயல்பாகவே இருக்கின்றது.
மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பொருட்கள் என தன்னைச் சுற்றியுள்ளவைகளை அடையாளம் காணும் இயல்புடையவர்களே குழந்தைகள்.
உருவங்களை அடையாளம் காண்பதுடன் அவற்றின் பெயர்களையும் அவர்களால் கூற முடியும்.
இதே போன்று எழுத்துகள் மற்றும் சொற்களின் அடையாளம் கண்டு அதன் பெயர்களையும் கூறும் திறன் குழந்தைகளிடம் இயல்பாகவே இருக்கும்/ இருக்க வேண்டும்.
தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகளில் பலருக்கும் எழுதப்படிக்கத் தெரியவில்லை என கள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
*ஒவ்வொரு குழந்தையும் தனக்கு நெருக்கமானவர்களின் பெயரை நினைவில் வைத்திருக்கின்றனர்.
*தனக்கு விருப்பமானவர்களின் பெயரை நினைவில் வைத்திருக்கின்றனர்.
*தான் அடிக்கடி பழகும் வாய்ப்புள்ளவர்களின் பெயரை நினைவில் வைத்திருக்கின்றனர்.
*உடனிருக்கும் போது மகிழ்ச்சியை உணர முடியும் என்றால் அவர்களது பெயரையும் குழந்தைகள் நினைவில் வைத்திருக்கின்றனர்.
மாறாக தனக்கு துன்பத்தையும், வருத்தத்தையும் தருபவர்களின் பெயரை உச்சரிக்கக் கூட குழந்தைகள் விரும்புவதில்லை.
காலப்போக்கில் அவர்களது பெயரை குழந்தைகள் மறந்துவிடுவார்கள்.
இந்த விதிமுறைகளை அப்படியே எழுத்துகளுக்கும், சொற்களுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும்.
எழுத்துகளும், சொற்களும் குழந்தைகளுக்கு விருப்பமான தாகவும், மகிழ்ச்சி அனுபவத்தை அளிக்கக் கூடியதாகவும் இருந்தால் இயல்பாகவே குழந்தைகள் எழுதப்படிக்க கற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் நாம் எழுத்துகளுக்காகவும், சொற்களுக்காகவும் தான் குழந்தைகளை துன்புறுத்துகின்றோம்.
இதனால் குழந்தைகள் எழுத்துக்களையும், சொற்களையும் வெறுக்கின்றனர்.
அதனால் அவர்களால் எழுதப்படிக்க முடிவதில்லை.
எழுத்துகளும், சொற்களும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அனுபவத்தை வழங்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
இத்தகைய சூழலை உருவாக்கிய பின்னரும் என் வகுப்பறையில் எழுதப்படிக்க தெரியாதவர்கள் இருக்கத்தான் செய்தனர்.
அவர்களுக்கு எழுத்துகளை/சொற்களை படித்துக் காட்டு, வாசித்துக் காட்டு என்பன போன்ற கட்டளைச் சொற்கள் அவர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஏனென்றால் முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு இதற்கான பொருள் முழுமையாக புரிவதில்லை.
இதற்கு மாற்றாக , அவர்களுக்கு மிக அதிகமான உறவு கொண்டுள்ள ஒரு சொல்லை பயன்படுத்திப் பார்த்தேன்.
இந்த எழுத்தின்/ சொல்லின் பெயரைக் கூறு? இது போன்று பெயர் என்ற சொல்லைப் பயன்படுத்தி குழந்தைகளை வாசிக்க வைத்தேன்.
அதன் பிறகு குழந்தைகளின் மனதில் ஒரு பெரிய வெளிச்சம் பாய்ந்ததை உணர முடிந்தது.
ஒவ்வொரு குழந்தையும் மிகவும் ஆர்வத்துடன் ஒவ்வொரு எழுத்தின்/சொல்லின் பெயரையும் கூறுவதைக் காணமுடிந்தது.
16 ஆண்டுகால முதல் வகுப்பு ஆசிரியர் அனுபவத்தின் பலனாகவே இந்த கண்டுபிடிப்பை நான் பார்க்கிறேன்.
எழுத்துக்கள்/ சொற்கள் குழந்தைகளின் விருப்பமான உருவங்களாக நாம் மாற்ற வேண்டும்.
இவைகளுக்கு பிற உருவங்களைப் போன்றே பெயர்களுண்டு.
எழுத்துக்களின்/ சொற்களின் பெயரைக் கூறுவதுதான் படித்தல்/ வாசித்தல் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் எழுத-படித்தல் என்பது மிக எளிதாக அடையக்கூடிய இலக்காக மாறிவிடும்.
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம்.
9943422906
arumariganeshu@gmail.com
Comments
Post a Comment