குழந்தை உலகம்-54

தலைமுறை இடைவெளி

ஒரு குழந்தை தன் தாயிடம் மிகுந்த பாசத்துடன் பழகுகின்றது.

அந்தத் தாயும் தன் குழந்தை மீது அளவுகடந்த அன்பு வைத்து வளர்க்கிறார்.

குழந்தைக்கு இந்த உலகம் புதியது என்பதால் இங்கு உள்ள பழக்கவழக்கங்கள் பற்றிய புரிதல் இருக்காது.

அதனால்​ எது சரி? எது தவறு? என்பது பற்றிய அறிவு வளர்ந்திருக்காது. அதனால் குழந்தை தான் நினைத்ததை அப்படியே செய்யும். நம்முடைய பார்வையில் தவறு என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு செயலையும் குழந்தை செய்யும். அதைக்கூட குழந்தை பிறரைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டிருக்கும். 

அப்படி நாம் தவறு என்று கருதும் ஒரு செயலையும் குழந்தை செய்யும் போது , அந்தத் தவறை குழந்தை   மீண்டும் செய்யக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் , அந்தக் குழந்தையை நாம் கண்டிக்கின்றோம் அல்லது தண்டிக்கின்றோம்.

தெரியாமல் செய்த தவறுக்காக தன் தாய், தன்னை தண்டிக்கும் போது குழந்தை அதிர்ச்சி அடைகிறது.

தாயின் மனதுடன் ஒன்றாக பின்னிப்பிணைந்து இருந்த குழந்தையின் மனம் தாயை விட்டு விலகுகிறது.

தான் செய்யும் செயல் சரியா? தவறா? என்பதை 

அறிய முடியாததால் தாயிடம் சில செயல்களை மறைக்க முயல்கிறது. சில நேரம் பொய் பேசவும் செய்கிறது.

எந்தவித ஒளிவும் மறைவும் இன்றி இருந்த குழந்தையின் மனம் தாயின் மனதை விட்டு வெகுதூரம் விலகும் நிலை ஏற்படுகிறது.

இதைத்தான் தலைமுறை இடைவெளி என்கிறோம்.

இந்த தலைமுறை இடைவெளி வந்துவிட்டால் , தாயின் சொல்லுக்கு குழந்தையிடம் எந்தவித மதிப்பும் இருக்காது.

இதில் மிகவும் கவலைப்பட வேண்டிய, கவனிக்கப்பட வேண்டிய ஒன்று உள்ளது.

நம் முன்னோரின் அனுபவம் , அறிவு, திறமை, பண்புகள், குணநலன்கள், பழக்கவழக்கங்கள், பண்பாடு,  கலாச்சாரம், நம்பிக்கைகள், மரபுகள், வாழ்வியல் நெறிகள் போன்றவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவது தடைபடுகிறது.

மனித இனம் தோன்றியதிலிருந்து இன்றுவரை கற்றுக் கொண்ட பல நல்லவைகள் நம் அடுத்த தலைமுறைக்கு சென்று சேராதது, மனித இனத்தின் மாபெரும் பின்னடைவுதான்.

நம் குழந்தையும் தன் முன்னோரிடமிருந்து கிடைக்க வேண்டியது கிடைக்காமல் மிகப் பெரிய இழப்பிற்கு ஆளாகின்றனர்.

தனக்கு தேவையானவை கிடைக்காததால் எதிர்காலத்தில் அதைத் தேடி நம் குழந்தை வெளியில்  அலையும் அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இறுதியில் நம் முன்னோரின் அடையாளத்திற்கு பதிலாக வேறு அடையாளத்தைத் சுமந்து , நம் முன்னோருக்கு தீராத அவமானத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.

எனவே நம் குழந்தைக்கும், நமக்கும் இடையே தலைமுறை இடைவெளி

விழுந்துவிடாத வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே தலைமுறை இடைவெளி விழுந்திருந்தால் அந்த இடைவெளியைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

நம் குழந்தை செய்யும் தவறுகளுக்கு உடனடியாக தண்டனை வழங்காதீர்கள்.

அவர்களிடம் உள்ள நமது உறவின் நெருக்கம் பாதிக்கப்படாத வகையில் ,   குழந்தைக்கு       புரிதல் ஏற்பட முயற்சி செய்யுங்கள்.

அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம்.
9943422906
arumariganeshu@gmail.com

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53