குழந்தை உலகம் -52

குழந்தை உலகம்-52

             அனுபவம் 

'குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்கச் சொல்கிறீர்களே ! எங்களுக்கும் செல்லம் கொடுத்து வளர்க்க ஆசைதான். ஆனால் செல்லம் கொடுத்தால் என் குழந்தை  ஒழுங்கு இல்லாமல்  மிக அதிகமாக  குறும்பு செய்கிறான். பிறருக்கு அதிகமான இடையூறு ஏற்படுத்துகிறான். இதற்கு என்ன தீர்வு? '

 என  நீங்கள் கேட்பதை என்னால் உணரமுடிகிறது. 

     இதைத் தீர்க்க எந்தவித குறுக்கு வழியும் என்னிடம் இல்லை. அவ்வாறு இருந்தாலும் , அவை இதற்கான நிரந்தரமான தீர்வாக இருக்கப்போவதில்லை.  இதற்கான நேர்மையான வழி ஒன்று மட்டும் தான் இருக்கிறது.  

    'அனுபவம்' என்ற இடநிரப்பிதான் மிகவும் நேர்மையான தீர்வாக இருக்கும். 

'நிறைகுடம் தழும்பாது. குறைக்கும் கூத்தாடும்' என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம்.

   நம் குழந்தையின் வயது உயர, உயர , அவனது மனமும் விரிவடைந்து கொண்டே  இருக்கும். அதன் கொள்ளளவிற்கு ஏற்ப , அந்த மனதிற்குள் , அனுபவங்களை நிரப்பிக் கொண்டே வந்தால் , அந்த மனம் கூத்தாடாது. குழந்தையும் தேவையற்ற குறும்பில் ஈடுபடாது.

    நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகளுக்கான அனுபவங்கள் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன.  அத்தகைய அனுபவங்களை குழந்தை பெற நாம் வழிகாட்ட வேண்டும். இயற்கையிலேயே குழந்தைக்கு ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

     குழந்தை பிறந்த உடனேயே துள்ளிக் குதித்து ஒடும் நிலையை இயற்கை வழங்கவில்லை.

 'கை, கால்களை உதைப்பது, குப்புற புரள்வது,  தவழ்வது, தட்டுத்தடுமாறி எழுவது, விழுந்து எழுந்து நடப்பது, போன்ற பல நிலைகளைக் கடந்த பின்னர்தான் ஓட முடியும்' என்ற விதிமுறையை இயற்கை வகுத்துள்ளது.  'கீழே விழுந்தால்  அடிபடும், வலிக்கும் ' என்பன போன்ற பல அனுபவங்களை பெற்ற பின்னர் தான்  ஓடமுடியும் என்பதுதான் இயற்கை விதி.

  இது போன்ற வயதிற்கு ஏற்ற  பல அனுபவங்களை குழந்தை நேர்மையாக  பெற்று வந்தால் , தேவையற்ற குறும்பில் ஈடுபடாது.

குழந்தை, தன்   வயதிற்கு ஏற்ற அனுபவங்களைப் பெறுவதற்கு நமது வழிகாட்டலும் மிகவும் அவசியம். சத்தம் போட்டு பேசும் வார்த்தைகள் காதுகளைப் தொடலாம். ஆனால் மனதைக் தொடக்கூட முடியாது. எனவே அமைதியாக பேசி , குழந்தையின் மனதிற்குள் நுழையும் வகையில் நமது வழிகாட்டலைத் தொடர்ந்து வழங்குவது நன்மை பயக்கும்.

  என் வகுப்பறையில் இதை முயற்சி செய்து பார்த்தேன். தினமும்    ஒவ்வொரு குழந்தையாக அருகில் அழைத்து அமைதியான முறையில் பல வழிகாட்டுதல்களை வழங்கி வந்தேன். இது   நல்ல அனுபவங்களாக மாறி  குழந்தையின் மனதை நிரப்பி வந்தன . தற்போது குழந்தையின் குறும்புகள் குறைந்து ஒழுங்கும், வளர்ச்சியும் மேம்பட்டு வருகின்றன. 

அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை. 
9943422906
arumariganeshu@gmail.com

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53