குழந்தை உலகம் -51

செல்லம்

.................

குழந்தைக்கு 'செல்லம்' கொடுத்தால் கெட்டுப் போய்விடுவார்கள் எனக்  கூறுபவர்கள் அன்று முதல் இன்று வரை இருக்கின்றனர். குழந்தையிடம் 'நீ அம்மா செல்லமா? அப்பா செல்லமா? ' எனக் கேட்பவர்களும் இருக்கின்றார்கள். வீட்டில் ஒருவர் செல்லம் கொடுத்தால் , இன்னொருவர் கண்டிப்பைக் காட்ட வேண்டும் என்ற கருத்தும் பரவலாக பின்பற்றப்படுகிறது.

இவைகளிலிருந்து ஒன்று தெளிவாகப் புரிகிறது. செல்லம் கொடுப்பதை குழந்தைகள் மிகவும் விரும்புகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தையைச் செல்லமாக வைத்திருக்க விரும்பினாலும், குழந்தை இதன் மூலம் கெட்டுப் போய்விடக்கூடாது என்ற பயத்தையும் உடன் வைத்திருக்கின்றனர்.

குழந்தை மிகவும் விரும்புகின்ற ஒன்றாகவும் , பெற்றோர்களால் எளிதில் கொடுக்க முடிகின்ற ஒன்றாகவும் "செல்லம்" இருக்கின்றது. குழந்தைக்கு செல்லம் கொடுத்து வளர்ப்பது நல்லதா? கெட்டதா? என்கிற வினாவிற்கு பதில் தேடுவது அவசியமில்லை.  குழந்தைகள் மிகவும் விரும்பக்கூடிய ஒன்றை, அவர்களின் மேம்பாட்டிற்கு எவ்வாறு​ பயன்படுத்தலாம் ? என்பதைக் கண்டுபிடிப்பதே இன்றைய தேவையாக இருக்கிறது.

செல்லம் என்பது என்ன?  'செல்லம்' என்பது அன்புடன் கொஞ்சல்  கலந்த ஒரு வரையறையற்ற, கட்டுப்பாடில்லாத சுதந்திர நிலை என்பதாக நாம் பொருள் கொள்கிறோம்.

செல்லமாக வளரும் குழந்தைகளுக்கு , கட்டுப்படுத்தும் நபர் இல்லாததால் , சுதந்திரமாக முடிவு எடுத்துச் செயல்படுகிறார்கள்.  அதனால் அவர்களது சுய சிந்தனை வளர்கிறது. அவர்கள் மிகவும் விரும்பும் செயல்களை, அவர்களாகவே முடிவு செய்து செயல்படுத்துவதால் மகிழ்ச்சியுடன் செயல்படுகிறார்கள்.

புதுமைகளைப்  படைக்கும் ஆற்றல் பெருகுகிறது. மிகவும் கடினமானவையாக நாம் கருதும் செயல்களைக் கூட மிக எளிதாக செய்து முடிக்கும் செயல் திறன்  மேம்படுகிறது.

செல்லம் கொடுப்பதால் சில முக்கியமான செயல்களைச் செய்வதற்கு, குழந்தை மறுத்து, வீம்பு பிடிப்பதும் உண்டு. இது , செல்லம் கொடுப்பதால் நாம் எதிர்கொள்ளும் பெரிய சிக்கல்.

அப்படி என் வகுப்பறையில் கல்வி சார் செயல்களை செய்ய மறுத்து, போக்கு காட்டும் குழந்தைகளை  நம் வழிக்கு கொண்டு வர இந்த "செல்லம்" என்பதையே ஆயுதமாகப் பயன்படுத்தினேன். 

"வகுப்பறையில் நான் எழுதிச் போடுவதை அழகாக எழுதுபவர்கள் என் செல்லப் பிள்ளைகள், என் முத்துப்பிள்ளைகள், என் வெல்லக் கட்டிப் பிள்ளைகள்". என்பன போன்ற செல்லமான கொஞ்சல் வார்த்தைகளைக் கூறினேன்.  அதன்பிறகு , வீம்பு பிடித்த குழந்தைகள் கூட அருமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

'செல்லம்' என்பது அன்பின் மற்றொரு வடிவம். அது ஒரு வலிமையான ஆயுதம். அதை நம் பிள்ளைகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவோம்.

......................................................
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ்நாடு மாநிலம்,
இந்தியா.
9943422906
arumariganeshu@gmail.com

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53